சென்னை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வலியுறுத்தியும் இன்று இரண்டாவது நாளாக ரெயில் மறியல் போராட்டம் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.
‘காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தில், விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, மாநிலம் முழுவதும், இரண்டு நாள், ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்தது. இதன்படி, தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இரண்டாவது நாளாக விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இன்று இரண்டாவது நாளாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
வைகோ – திருமாவளவன்
சென்னை எழும்பூரில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் ஏராளமானோர் பேரணியாக சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட சென்றனர்.
அப்போது மத்திய அரசுக்கு எதிராககோஷம் எழுப்பப்பட்டது. ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட வந்தவர்களை போலீசார் தடுப்பு அமைத்து தடுத்தனர்.
இதனால் போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து எழும்பூர் ரயில் நிலையத்திற்குள் சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முத்தரசன் – ஜவாஹிருல்லா
திருவாரூரில் 2வது நாளாக ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் விவசாய சங்கத்தினர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். திருச்சி, புள்ளம்பாடியில் வைகை விரைவு ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
லால்குடி அருகே வாளாடி என்ற இடத்தில் கடலூர் – திருச்சி ரயில் மறித்து போராட்டம் நடத்தப்பட்டது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட த.மா.கா.,வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை கே.ஆர்.ராமசாமி மற்றும் பெரியகருப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாசன் – பழனிமாணிக்கம் – வெள்ளையன்
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் த.மா.கா., தலைவர் வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சீமான்
சென்னை வால்டாக்ஸ் சாலையில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றனர்.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு, தமிழகத்திற்கு துரோகம் செய்கிறது. அரசியல் ஆதாயத்திற்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது என தமிழகத்தை சேர்ந்த அணைத்து கட்சி தலைவர்களும் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
19 ரயில்கள் ரத்து
நேற்று நடைபெற்ற ரெயில் மறியல் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் 27 ஆயிரம் பேர் கைதாகி, மாலையில் விடுவிக்கப்பட்டனர். போராட்டம் தீவிரமானதால், 19 ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்தது.
நேற்று தமிழகம் முழுவதும், பல இடங்களில் மறியல் போராட்டம் நடந்ததால், ரயில் போக்குவரத்தில், பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக 19 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்து உள்ளது.