1siddharamaiah
டில்லி:
காவிரி பிரச்சினை குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா எழுதிய கடிதத்துக்கு பதில் அளிக்க பிரதமர் மறுத்துவிட்டார். மேலும்  நேரில் சந்திக்கவும் அனுமதி தராததால் கர்நாடக காங்கிரஸார் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப் பட்டதை கண்டித்து கர்நாடகாவில், கன்னட வெறியர்காளல்  வன்முறை வெடித்துள்ளது.  இந்தப் பிரச்சினையில் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா  கடிதம் எழுதி இருந்தார். ஆனால் இதற்கு மோடி பதில் அளிக்கவில்லை.
மேலும், வன்முறை வெறியாட்டத்தின் உச்சக்கட்டமாக 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் கொளுத்தப்பட்டதை தொடர்ந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதையடுத்து நடைபெற்ற  அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் சித்தராமையா கூறியதாவது:
“காவிரி பிரச்சினையில் பிரதமர் மோடி தலையிட்டு உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும். இது தொடர்பாக டெல்லி சென்று பிரதமரை புதன்கிழமை சந்திக்க இருக்கிறேன்” என பகிரங்கமாக அறிவித்தார்.
ஆனால், பிரதமர் , கர்நாடக முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்காததால்,  பிரதமரை சந்திக்க சித்தராமையா நேற்று டெல்லிக்கு செல்லவில்லை. இதுகுறித்து சித்தாரமையா கூறும்போது,   “என்னை சந்திக்க பிரதமர் மோடி நேரம் ஒதுக்கி இருப்பதாக முதலில் தகவல் வந்தது. பிறகு நேரம் ஒதுக்கவில்லை என அவரது அலுவலகத்தில் தெரிவித்தார்கள். எனவே நேரம் ஒதுக்கினால் டெல்லி சென்று பிரதமரை சந்திப்பேன்” என்றார்.
இதுபற்றி கர்நாடக அரசியல் வட்டாரத்திலும், அரசு வட்டாரங்களிலும்  கிடைத்த தகவல்: தமிழக முதல்வர் ஜெயலலிதா போல, கர்நாடக முதல்வரும் கடந்த மாதங்களில் பிரதமருக்கு எட்டு கடிதம் எழுதி உள்ளதாகவும், ஆனால் எந்த கடிதத்திற்கும் பிரதமரிடம் இருந்து பதில் வரவில்லை என்று கூறினார்கள்.
மேலும், காவிரி பிரச்சினையில் வன்முறையை கட்டுப்படுத்த தவறியதை அடுத்து, அமைச்சரவை கூட்டத்திற்கு பின், பிரதமரை சந்திக்க 2 முறை நேரம் கேட்டார்.  ஆனால், முதலில்  புதன்கிழமை நேரம் ஒதுக்கி இருப்பதாக பிரதமர் அலுவலகத்தில் தெரிவித்தார்கள். ஆனால் சிறிது நேரத்தில் நேரம் இல்லை என்று மறுத்துவிட்டார்கள்.
மோடியின் இதுபோன்ற அணுகுமுறையால் சித்தராமையா அதிருப்தியில் உள்ளதாகவும், இதன் காரணமாக கர்நாடக காங்கிரசில் சித்தராமையா மீது மூத்த தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், இதன் காரணமாக  முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய எண்ணிதாகவும் தகவல்கள் வந்துள்ளன.