திருச்சி:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்தியஅரசின் தமிழக விரோத போக்கை கண்டித்து, டெல்டா பாசன விவசாயிகள் தற்கொலை போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசை கண்டித்து திருச்சி காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை முயற்சி போராட்டம் நடத்த வந்த 35 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியதை கண்டித்து, திருச்சி காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை போராட்டம் நடத்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் முடிவு செய்தது.
சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் நெற்றியில் பட்டை நாமமிட்டு, மேல் சட்டை அணியாமல், கழுத்தில் தூக்கு கயிறு மாட்டிக்கொண்டு காவிரி பாலத்துக்கு வந்து தற்கொலை போராட்டம் செய்ய முன்வந்தனர்.
இதையடுத்து ஏராளமான போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர்.
மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி விவசாயிகள் பாலத்தை நோக்கி தற்கொலை போராட்டம் செய்ய வந்தனர்.
ஆனால், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தைக்கு பின் அம்மா மண்டபம் வரை பேரணியாக செல்ல அனுமதித்தனர்.
இதையடுத்து, விவசாயிகள் அனைவரும் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி ஊர்வலமாக சென்றனர்.
அப்போது திடீரென அய்யாக்கண்ணு உள்ளிட்ட சில விவசாயிகள் பாலதடுப்பு கட்டையில் ஏறி காவிரி ஆற்றில் குதிக்க முயன்றனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், ஆத்திர மடைந்த விவசாயிகள் போலீசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு சாலையில் படுத்து உருண்டு மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டம் நடத்த வந்த 35 விவசாயிகளையும் போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
இதுகுறித்து அய்யாகண்ணு கூறியதாவது:
“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு அரசியல் நோக்கோடு நடக்கிறது. தமிழக விவசாயிகளை வஞ்சிக்கிறது. விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டி விட்டுள்ளது. தமிழக விவசாயிகளின் நிலைைய உணர்ந்து, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்.
இல்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் பெரிய அளவில் நடத்தப்படும்’’ என்றார்.
உச்சநீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு தெரிவித்த மத்திய அரசை கண்டித்து, நாகை புதிய கடற்கரையில் இறங்கி காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின்போது, கடற்கரையில் நின்று மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதைதொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் தெய்வசிகாமணி கூறுகையில்,‘‘காவிரி விவகாரம் உள்ளிட்ட அனைத்து விவசாயிகள் பிரச்னையிலும் தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி 6ம்தேதி சென்னையில் அனைத்து கட்சிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தை தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் நடத்துகிறது.
இக்கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முறையிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றார்.