சென்னை:
காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கைகளால் எந்த பயனுமில்லை என்றும், வரும் 8-ம் தேதி யாவது தமிழகத்திற்கு நீதி கிடைக்காவிட்டால்,ஒட்டுமொத்த தமிழகமும் கிளர்ந்து எழும் என்றும் அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று பாமக தலைவர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

காவிரி மேலாண்மை வாரியம் குறித்த வரைவுத் திட்டத்தை மத்திய அரசு வரும் 8-ம் தேதி செவ்வாய்க்கிழமைக் குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தமிழகத்திற்கு கர்நாடகம் உடனடியாக 4 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.

காவிரி சிக்கலில் தமிழகத்திற்கு நீதி கிடைப்பதில் இது தாமதத்தையும், பின்னடைவையும் மட்டுமே ஏற்படுத்தும்.

காவிரி பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான செயல்திட்டத்தை இன்றைக்குள் தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. ஆனால், மத்திய அரசோ உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கொஞ்சமும் மதிக்க வில்லை;வரைவு செயல்திட்டத்தையும் தாக்கல் செய்யவில்லை.

மாறாக, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, காவிரி வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய கூடுதலாக 10 நாட்கள் அவகாசம் அளிக்கும்படி மத்திய அரசு கோரியுள்ளது. இது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது ஆகும்.

அடுத்த 10 நாட்களில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிவடைந்து விடும், அடுத்த 15 நாட்களில் உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டு விடும், அதுவரை இந்த விவகாரத்தை தாமதப்படுத்தினால், அடுத்த சில மாதங்களுக்கு இச்சிக்கலை கிடப்பில் போட முடியும் என்ற நோக்கத்தில் தான் மத்திய அரசு இவ்வாறு செய்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

மத்திய அமைச்சர்களும், பிரதமரும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் தான் வரைவுத் திட்டத்திற்கு ஒப்புதல் பெற முடியவில்லை என்று மத்திய அரசுத் தரப்பில் கூறப்படுவதை ஏற்க முடியாது. பிரதமராக இருந்தாலும், மத்திய அமைச்சர்களாக இருந்தாலும் காவிரி பிரச்னைக்கு தீர்வு காண்பதை விட, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் முக்கியமில்லை என்பது மத்திய ஆட்சியாளர்களுக்கு தெரியாதா?

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி வரைவுத் திட்டத்தை தயாரித்து தாக்கல் செய்யாமல், தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வது கடமை தவறிய செயல் என்பது அவர்கள் அறியாததா? இந்த உண்மைகள் அனைத்தும் மத்திய ஆட்சியாளர்களுக்கு நன்றாக தெரியும். வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்யாவிட்டால் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவிக்கும்; அதைத் தவிர வேறெதுவும் நடக்காது என்ற துணிச்சலில் தான் மத்திய அரசு இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது.

மத்திய ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை கர்நாடகத் தேர்தல் வெற்றியுடன் ஒப்பிடும்போது காவிரி விவகாரம் ஒரு பொருட்டே இல்லை. கர்நாடகத் தேர்தல் வெற்றிக்காக காவிரிப் பிரச்னையில் எத்தகைய துரோகத்தையும் செய்ய மத்திய அரசு தயங்காது. அதன்படி தான் மத்திய அரசு தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் இழைக்கிறது.

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் அணுகுமுறையும் தமிழகத்திற்கு நீதி வழங்குவதாக இல்லை. காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அடுத்த 6 வாரங்களில் அதாவது மார்ச் 29&ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டுமென்று ஆணையிட்டிருந்தது. அந்தக் கெடு முடிவடைந்து 5 வாரங்களாகிவிட்ட நிலையில் இன்று வரை மத்திய அரசு வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்யவில்லை.

அதுமட்டுமின்றி கூடுதலாக 10 நாட்கள் அவகாசம் கோருகிறது. இது நீதிமன்ற அவமதிப்பு என்பது தெரிந்தும், மத்திய அரசைக் கண்டிப்பது போல சில வார்த்தைகளைக் கூறிவிட்டு, 5 நாட்கள் அவகாசம் அளித்திருக்கிறது. 8&ஆம் தேதிக்குள் கர்நாடக தேர்தல் முடிவடையாது என்பதால் மத்திய அரசு வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்யாது. உச்சநீதிமன்றமும் மத்திய அரசை இன்னொரு முறை கண்டித்து விட்டு கூடுதலாக ஓரிரு வாரங்கள் அவகாசம் அளிக்கும். இது பெரும் துரோகம்.

காவிரி மேலாண்மை வாரியம் இன்று வரை அமைக்கப்படாததற்கு உச்சநீதிமன்றமும் காரணம் என்பதை மறுக்க முடியாது. கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 20-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அடுத்த 4 வாரங்களில் மேலாண்மை வாரியத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.

பின்னர் செப்டம்பர் 30-ஆம் தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அடுத்த 4 நாட்களில் வாரியம் அமைக்க வேண்டும் என ஆணையிட்டது. அதற்கு முதலில் ஒப்புக்கொண்ட மத்திய அரசு, பின்னர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படி ஆணையிடுவதற்கு உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு கூறியது.

அப்போதே உச்சநீதிமன்றம் அதன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்திருந்தால் இந்நேரம் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், அப்போது உச்சநீதிமன்றம் பின்வாங்கியதன் மூலம் தமிழகத்திற்கு துரோகம் இழைக்கப்பட்டது.

இப்போது கூட காவிரி மேலாண்மை வாரியத்தை மார்ச் 29-ஆம் தேதிக்குள் மத்திய அரசு அமைக்காத நிலையில், அதற்கு காரணமான மத்திய நீர்வளத்துறை செயலாளரை உச்சநீதிமன்றத்திற்கு அழைத்து நீதிபதிகள் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். இரண்டாம் கட்டமாக உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு இன்றுடன் முடிவடைந்த நிலையில், காவிரி வரைவு செயல்திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யத் தவறிய மத்திய நீர்வளத்துறை அமைச்சரை அடுத்த ஓரிரு நாட்களில் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நீதிபதிகள் ஆணையிட்டிருக்க வேண்டும்.

குறைந்தபட்சம், கூடுதல் காலக்கெடு கோரி கடந்த 27-ம் தேதி மத்திய அரசு மனுத் தாக்கல் செய்ய போதே, அதை ஏற்க மறுத்து இன்றைக்குள் வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்யும்படி ஆணையிட்டிருக்க வேண்டும்.

இதேகோரிக்கையை மத்திய அரசு நேற்று முன்வைத்த போதாவது கண்டிப்பு காட்டியிருக்க வேண்டும். ஆனால், அதையெல்லாம் செய்யாத உச்சநீதிமன்றம், ஒவ்வொருமுறை இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போதும் ‘கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்’ என்று எச்சரிப்பதால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை.

அதேபோல், கடந்த ஆண்டு கர்நாடகம் 80 டி.எம்.சி தண்ணீரை தராமல் கர்நாடகம் ஏமாற்றிய நிலையில், அதைப் பெற்றுத் தராமல் மே மாதத்திற்குரிய 5 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிடும்படி உச்சநீதிமன்றம் ஆணை யிட்டிருப்பதால் எந்த நன்மையும் விளையாது.

சுருக்கமாகக் கூற வேண்டுமானால், ‘காவிரிப் பிரச்னை யில் நான் அடிப்பது போல அடிக்கிறேன்… நீ அழுவதைப் போல அழு’ என்பதைப் போன்று தான் உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய அரசின் அணுகுமுறை அமைந்தி ருக்கிறது.

தமிழக அரசோ இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. காவிரிப் பிரச்னையில் வரும் 8-ஆம் தேதியாவது தமிழகத்திற்கு நீதி கிடைக்காவிட்டால், அதைக் கண்டித்து ஒட்டுமொத்த தமிழகமும் கிளர்ந்து எழுந்து போராடுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.