சென்னை

ரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத வாக்கில் கொரோனா 2ஆம் அலை உண்டாகலாம் என வல்லுநர் குழு எச்சரிக்கை அளித்துள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு இதுவரை மருந்து மற்றும் தடுப்பூசி கண்டறியப்படவில்லை.    உலகில் பல நாடுகள் தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.   ரஷ்யாவில் தடுப்பூசி கண்டு பிடித்து விட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும் விஞ்ஞானிகள் அது குறித்து சந்தேகம் எழுப்பி உள்ளனர்.   இந்நிலையில் தமிழக அரசின் மருத்துவ வல்லுநர் குழு உறுப்பினர் ராமசுப்ரமணியன் ஒரு செய்தி தொலைக்காட்சிக்குப்  பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர், “தற்போது கொரோனா தொற்று மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் உள்ளது.   தமிழகத்தில் கொரோனா தொற்று எதிர்பார்த்ததை விட  தீவிரமாயுள்ளது.  வரும் செப்டம்பர் மாதம் முழுவதுமாக குறையும் என எதிர்பார்த்தது தவறாகி உள்ளது.  தற்போது தான் இங்கு கொரோனா குறையத் தொடங்கி உள்ளது.  எனவே இன்னும் மூன்று மாதத்துக்குள் முழுமையாகக் குறையலாம்.

அநேகமாக வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத வாக்கில் இரண்டாம் அலை ஏற்படக்கூடும் அடுத்த வருட மத்தியில் இந்தியாவில் முழுமையாக கொரோனா குறையலாம்.   முதலில் இளைஞர்களுக்கு பரவிய தொற்று தற்போது முதியோருக்குப் பரவத் தொடங்கி உள்ளது.    கொரோனா தொற்று குறைந்தாலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கொரோனா முழுவதுமாக விலகி விட்டதாக மக்கள் கருதக் கூடாது. ஒரு சில இளைஞர்கள் முகக் கவசம் இல்லாது விழிப்புணர்வின்றி அலைவது வருத்தத்தைக் கொடுக்கிறது.   எனவே முகக் கவசம் மற்றும் ஊரடங்கு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.   குழந்தைகளுக்குச் சளி,காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.” கொரோனா தடுப்பூசி கண்டு பிடித்தாலும் முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.