வாஷிங்டன்: கொரோனா வைரசால் பிடிக்கப்பட்டது கடவுளின் ஆசிர்வாதம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் குறித்து நக்கலடித்து வந்த அதிபர் டிரம்ப், முக்கவசம் அணிவதையும் தவிர்த்து வந்தார். இந்த நிலையில், கடந்த வாரம், அவருக்கு தொற்று உறுதியானது. அவரது உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா தொற்று பரவிய நிலையில், அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்பும் (74 வயது) அவரது மனைவி மெலனியா டிரம்ப்புக்கும் சோதனை நடத்தப்பட்டது. அதில், அவர்களுக்கு தொற்று பரவியது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
3 நாட்கள் மட்டுமே அவர்கள் சிகிச்சை பெற்ற நிலையில், கொரோனாவில் இருந்துவிடுபட்டு விட்டதாக கூறி, வெள்ளை மாளிகை திரும்பினர். வெள்ளை மாளிகை திரும்பியதும், முக்கவசத்தை தூக்கி எறிந்த டிரம்ப், எப்போதும் போல செயல்பட தொடங்கினார். இதற்கு மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், அதிபர் டிரம்பின் உடல்நிலை தொடர்பான தகவல்களை வெள்ளைமாளிகை நேற்று வெளியிட்டது. அதில் அதிபர் டிரம்பிற்கு கடந்த 4 நாட்களாக காய்ச்சல் உள்பட எந்த ஒரு கொரோனா அறிகுறியும் இல்லை. டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் டிரம்பிற்கு ஆக்சிஜன் உதவிகள் அளிக்கப்படவில்லை. அதற்கான தேவையும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், டிரம்ப் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், தான் கொரோனா வைரசால் பிடிக்கப்பட்டது ‘கடவுளிடமிருந்து வந்த ஆசீர்வாதம்’ என்று தெரிவித்து உள்ளார். இது நம்பமுடியாதது. இருந்தாலும், இது ஒரு அருமையான வேலை செய்தது “என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பல கோடி மக்களுக்காக தன்னை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். கொரோனாவை உலகம் முழுவதும் பரப்பிய சீனா மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.