சென்னை தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
நாட்டின் சில மாநிலங்கள், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதற்கு ஏற்றார்போல் இடஒதுக்கீடு வழங்கி வருகிறது. அதுபோல தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு, அதுமத்தியஅரசு செய்ய வேண்டியது என கூறி தவிர்த்து வருகிறது.
ஏற்கனவே, கர்நாடகம், பீகார், ஒடிசா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து 5-வது மாநிலமாக ஜார்க்கண்ட் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள உள்ளது.
இந்த பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் , தெலுங்கானா மாநிலத்தைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்திலும் அடுத்த வாரம் தொடங்கவுள்ள புதிய நிதியாண்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. கர்நாடகம், பீகார், ஒடிசா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து ஐந்தாவது மாநிலமாக ஜார்க்கண்ட் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள உள்ளது.
ஆந்திரா உள்ளிட்ட மேலும் சில மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசு வெற்று நாடகங்களை மட்டுமே நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது. எனவே, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.