டெல்லி:  மத்திய பாஜக அரசு அறிவித்துள்ள சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு  அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு நிதி அளிக்குமாறு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய கேபினட் அமைச்சரவை சாதிவாரி கணக்கெடுப்புக்கு அனுமதி வழங்கி உள்ளது. மக்கள் தொகை பொதுக்கணக்கெடுப்பின்போது சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அமைச்சர்  அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். “இந்திய அரசியலமைப்பின் படி, மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மத்தியஅரசின் செயலாகும். ஆனால், சில மாநிலங்கள் கணக்கெடுப்புகளை தன்னிச்சையாக  நடத்தியுள்ளன,  சில மாநிலங்கள் இதைச் சிறப்பாகச் செய்துள்ளன, மற்ற சில அரசியல் கோணத்தில் இருந்து வெளிப்படையான முறையில் இத்தகைய கணக்கெடுப்புகளை நடத்தியுள்ளன. இத்தகைய கணக்கெடுப்புகள் மாநிலத்தில் சந்தேகங்களை உருவாக்கியுள்ளன,” என்று  தெரிவித்தார்.

மத்தியஅரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், திமுக உள்பட பல அரசியல் கட்சிகள் வரவேற்பு அளித்துள்ளன.  மத்தியஅரசின்  சாதிவாரி கணக்கெடுப்பு முடிவை வரவேற்பதாக தெரிவித்துள்ள  மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி,  காங்கிரஸ் கட்சியின் கொள்கையை மத்திய பாஜக அரசு ஏற்றுள்ளது என்றும், ஆனால்,  அதற்கான காலக்கெடு குறித்தும் தெரிவிக்க வேண்டும் என்றும்  கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு குறித்து, கூறும்போது, “சாதிவாரிக் கணக்கெடுப்பு மிகவும் அவசியம். இதன் மூலமாகத்தான், ஒவ்வொரு நபரின் முன்னேற்றத்தையும் முழுமையாக உறுதிப்படுத்த முடியும். மேலும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் சாதிவாரிக் கணக்கெடுப்பு பணிகளைத் தொடங்க, பட்ஜெட் ஒதுக்கீடுக்கு காங்கிரஸ் கோரிக்கை விடுக்கிறது’’ என்று தெரிவித்தார்.

மேலும்,  புதுப்பிக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாத நிலையில், அர்த்தமுள்ள சமூக நீதி மற்றும் அதிகாரமளிக்கும் திட்டங்களுக்கு குறிப்பாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மிகவும் அவசியமான நம்பகமான தரவுத்தளம் முழுமையடையாது என்று நான் அச்சப்படுகிறேன். இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது மத்திய அரசின் பொறுப்பாகும். 2021 இல் வழக்கமான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது இன்னும் நடத்தப்படவில்லை என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதை உடனடியாக செய்வதுடன் முழுமையான சாதிவாரி கணக்கெடுப்பை அதன் ஒருங்கிணைந்த பகுதியாக நடத்த வேண்டும் என்று கோருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் – முதலமைச்சர் ஸ்டாலின்:

சாதிவாரிக் கணக்கெடுப்பு திமுகவுக்கும், இந்தியா கூட்டணிக்கும் கிடைத்த மற்றுமொரு வெற்றி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மிகவும் அவசியமான சாதிவாரிக் கணக்கெடுப்பை எடுக்க மறுத்து, தாமதப்படுத்தி வந்த மத்திய அரசின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததையடுத்து வரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறது. ஆனால், முக்கிய கேள்விகளுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. அது எப்போது துவங்கும் எப்போது முடியும் என்று எதுவும் கூறவில்லை , பிகார் தேர்தலில் சமூக நீதி ஆதிக்கம் செலுத்தும் நிலையில், இந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு முக்கியமான அரசியல் தேவையை ஏற்படுத்தியிருக்கிறது.

எதிர்க்கட்சிகள் சாதியின் அடிப்படையில் மக்களை பல பிரிவுகளாகப் பிரிக்கின்றனர் எனக் குற்றம் சாட்டிய அதே பிரதமர் தற்போது எதிர்க்கட்சிகளில் கோரிக்கைக்கு அடிபணிந்துள்ளார். உண்மையான சமூக நீதி நோக்கத்திற்காக சாதிவாரிக் கணக்கெடுப்பு மிகவும் அவசியமானது. அநீதிக்கான அளவைப் புரிந்துகொள்ளாமல், அதை நாம் சரி செய்யமுடியாது. தமிழக அரசுக்கும், திமுகவுக்கும் கடின உழைப்பால் கிடைத்த வெற்றி. சாதிவாரிக் கணக்கெடுப்புக் கோரி முதலில் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய வர்கள் நாங்கள்.

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு, மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறி பிரதமருடனான ஒவ்வொரு சந்திப்பிலும் வலியுறுத்தி வந்தோம். மற்ற மாநிலத்தினர் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு வலியுத்தினாலும், நாங்கள் மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு தொடர்ந்து வலியுறுத்தினோம். இது மத்திய அரசு சார்ந்தது. இது திமுகவுக்கும், இந்தியா கூட்டணிக்கும் கிடைத்த மற்றுமொரு வெற்றி” எனப் பதிவிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

இதுதொடர்பாக  டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் அடுத்து நடைபெறவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்தியாவில் சமூகநீதியை நிலை நிறுத்த வகை செய்யும் இந்த முடிவு மிகவும் சிறப்பானது.

தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது தான் பாமகவின் நிலைப்பாடு ஆகும். இதற்காக 1998-ம் ஆண்டு முதல் பாமக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாமகவின் கோரிக்கையை ஏற்று 2001-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த அன்றைய உள்துறை அமைச்சர் அத்வானி ஒப்புக்கொண்ட நிலையில், குஜராத் நிலநடுக்கம் காரணமாக அது சாத்தியமில்லாமல் போனது.

2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி 2008-ல் அன்றைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம் பாமகவைச் சேர்ந்த அன்றைய மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் 140-க்கும் மேற்பட்ட ஓபிசி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துப் பெறப்பட்ட கோரிக்கை மனுவை அளித்தார். அதனடிப்படையில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஒப்புக்கொண்ட மன்மோகன்சிங் அரசு, அதன்பின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு சமூக, பொருளாதார, கல்வி, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அதன் முடிவை வெளியிடவில்லை.

2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று இன்றைய பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் நேரில் வலியுறுத்தினேன். மூன்று முறை கடிதம் எழுதினேன். மக்களவையிலும், மாநிலங்களவையிலும் அன்புமணி ராமதாஸ் பலமுறை வலியுறுத்தியிருந்தார்.

பாமகவின் முயற்சியால் கடந்த மூன்று முறை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது கிட்டத்தட்ட சாத்தியமாகி கடைசி நேரத்தில் கை நழுவிய நிலையில், இப்போது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது பாமகவின் 30 ஆண்டுகளுக்கும் மேலான முயற்சிக்கு கிடைத்த பலன் ஆகும். இதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு பாமக சார்பில் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை எவ்வளவு விரைவாக தொடங்க முடியுமோ, அவ்வளவு விரைவாக மத்திய அரசு தொடங்க வேண்டும். அதன் மூலம் அனைவருக்கும் முழுமையான சமூகநீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அதேநேரத்தில் மத்திய அரசு நடத்தும் கணக்கெடுப்பு மேலோட்டமான ஒன்றாகத் தான் இருக்கும் என்பதாலும், தமிழ்நாட்டில் உள் இட ஒதுக்கீடு வழங்க கூடுதல் புள்ளிவிவரங்கள் தேவை என்பதாலும் தமிழக அரசு 2008-ம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின் கீழ் மக்களின் சாதி, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிய தனியாக சாதிவாரி சர்வே ( Caste Survey) எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.