சென்னை: மாநிலம் முழுவதும் காவல்துறையினர், அலர்ட்டாக இருக்க வேண்டும் என்றும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
மாநிலம் முழுவதும் அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில்,
வரும் நாட்களில் முக்கிய விழாக்கள், பண்டிகைகள், சாதி, மதத் தலைவர்களின் பிறந்த நாட்கள் மற்றும் நினைவு நாட்கள் வர உள்ளதால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளதால், காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
ஆயுதப்படையில் உள்ள காவலர்களுக்கும், சட்டம்-ஒழுங்கு பிரிவில் உள்ள இளம் காவலர்களுக்கும் ஒவ்வொரு வாரமும் இரண்டு அல்லது மூன்று கவாத்து பயிற்சி வழங்கி தயார்படுத்த வேண்டும்.
ஆயுதப் படையில் துணை கண்காணிப்பாளர் முதல் ஆய்வாளர்கள் வரையானவர்களுக்கு கலவர சம்பவங்களில் படையை வழிநடத்துவதற்கு உரிய பயிற்சிகள் அளிக்க வேண்டும்.
ஆயுதப் படை காவலர்களை தயார் நிலையில் வைத்து, அவசரகாலப் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்
கலவரத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் வஜ்ரா, வருள் மற்றும் இதர வாகனங்களை முறையாகப் பராமரித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்
இவ்வாறு சுற்றறிக்கையில் டிஜிபி சைலேந்திர பாபு குறிப்பிட்டள்ளார்.
டிஜிபியின் சுற்றறிக்கையை பார்க்கும்போது, தமிழ்நாட்டில் சாதி மோதல் ஏற்படும் வாய்ப்பு இருப்பது போன்ற தோற்றதை ஏற்படுத்தி உள்ளது.