மகளிர் மசோதா குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி “ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும், மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தவேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இதுகுறித்து ராகுல் காந்தி மேலும் கூறுகையில், “இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு குறித்து இந்த மசோதாவில் குறிப்பிடப்படாதது மிகவும் கவலையளிக்கிறது.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பணியாற்றுவதாகக் கூறிக்கொள்ளும் மோடி தனது கீழ் செயல்படும் இந்திய அரசின் 90 செயலாளர்களில் எத்தனை பேர் ஓ.பி.சி. என்று கூறமுடியுமா ?
இந்த 90 பேரில் வெறும் 3 பேர் மட்டுமே ஓ.பி.சி. என்றும் அதிலும் இந்தியாவின் நிதிநிலையில் இவர்களின் பங்களிப்பு வெறும் 5 சதவீதம் மட்டுமே என்றும்” ராகுல் காந்தி கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் “மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்துங்கள்.
2011ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் மன்மோகன் சிங் தலைமையிலான (UPA) மேற்கொண்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களையும் உடனடியாக வெளியிடுங்கள்.
ஓபிசி பிரிவினருக்கான உரிய அங்கீகாரம் கிடைக்க ஜாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் இந்த தருணத்தில் அவர்களை திசை திருப்பும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.
இந்தியாவில் எத்தனை ஓபிசிக்கள் உள்ளனர்? எத்தனை தலித்துகள்? எத்தனை ஆதிவாசிகள்? என்ற கேள்விக்கு ஜாதிக் கணக்கெடுப்பில் இருந்துதான் பதில் கிடைக்கும்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை இன்றே நிறைவேற்ற வேண்டும் என்பதே அரசிடம் எனது கோரிக்கை. எல்லை நிர்ணயம் மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு பிரிவு தேவையில்லை. அவர்களுக்கு 33% மட்டும் கொடுங்கள்.
ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்துங்கள். நாங்கள் செய்த ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனே வெளியிடுங்கள். அதை நீங்கள் செய்யவில்லை என்றால், நாங்கள் செய்வோம்” என்று கூறினார்.
மேலும், புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்முவை அழைக்கத் தவறியதற்காக மத்திய அரசையும் அவர் கண்டித்தார். “இது ஒரு நல்ல கட்டிடம். தரையிலும் நாற்காலிகளிலும் நல்ல மயில் இறகுகள் உள்ளன. ஆனால் வெளிப்படையாக இந்த கட்டிடத்தில் இந்திய ஜனாதிபதியை பார்க்க விரும்புகிறேன். இந்திய ஜனாதிபதி ஒரு பெண். அவர் பழங்குடி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்கு மாற்றும்போது அவர் தெரியும்படி இருந்திருந்தால் அது பொருத்தமாக இருந்திருக்கும்” என்றும் தெரிவித்தார்.