டில்லி,
கருப்பு பணத்தையும், கள்ளப்பணத்தையும் ஒழிக்கும் விதமாக பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்குமாறு பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
கடந்த 8ந்தேதி முதல் பழைய ரூ.500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அதிரடியாக மத்திய அரசு அறிவித்ததில் இருந்து, பொதுமக்கள் அன்றாட செலவுக்கே பணம் இல்லாமல் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
மேலும், தற்போது சம்பள நேரம் என்பதால், செலவுக்கு பணம் எடுக்க மக்கள் வங்கிகளில் குவிந்து வருகின்றனர். ஆனால் எந்தவொரு வங்கியிலுமே மக்களின் தேவைக்கு பணம் இல்லாததால் பொதுமக்கள் மத்திய அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
ஆனால் இதுகுறித்து மத்தியஅரசு எந்தவித சலனமும் கொள்ளாமல் மக்களின் துயரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
மேலும் வரும் காலத்தில் ரொக்கமில்லா பண பரிவர்த்தனை செய்யப்பட வேண்டிய நோக்கம் குறித்தும், இந்திய பொருளாதாரம் மேம்பட இந்த பண பரிவர்த்தனையின் அவசயிம் குறித்தும் கட்டுரை எழுதி உள்ளார்.
ஊழலையும் கறுப்புப் பணத்தையும் ஒழிக்கும் நடவடிக்கையாக, ரொக்கப் பணமில்லா பரிவர்த்தனை நோக்கிய இந்திய பொருளாதாரத்தின் அவசியத்தை பிரதமர் நரேந்திர மோடி விளக்கியிருக்கிறார்.
இது தொடர்பாக, `லிங்கிடுஇன்`(Linkedin) சமூக வள தளத்தில் அவர் வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறியுள்ள 10 முக்கிய அம்சங்கள்..
21-ம் நூற்றாண்டின் இந்தியாவில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏழை, நடுத்தர மக்களின் கனவுகளுக்கு சீர்குலைப்பதுடன், ஊழலால் பொருளாதார வளர்ச்சி தடைபடுகிறது.
ஊழலுக்கும் கறுப்புப் பணத்துக்கும் மிகப் பெரிய அளவிலான ரொக்கப் பணம்தான் மகத்தான ஆதாரமாக விளங்குகிறது.
ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என நவம்பர் 8-ல் வெளியிட்ட அறிவிப்பு, ஊழலையும் கறுப்புப் பணத்தையும் ஒழிப்பதற்கான இலக்குடன் மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு.
உங்கள் (நாட்டு மக்கள்) ஒருவரையும் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக இளம் நண்பர்களுக்கு நான் முன்வைப்பது யாதெனில், `ரொக்கப் பணமில்லா பரிவர்த்தனை` என்ற மாற்றத்துக்கு தலைமையேற்று, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் தூண்டுகோளாகவும் இருங்கள்.
ரொக்கப் பணமில்லா பரிவர்த்தனையே ஊழலும் கறுப்புப் பணமும் இல்லாத வலுவான இந்தியாவுக்கு அடித்தளம்.
நாம் இன்று மொபைல் பேங்கிங் – மொபைல் வாலட் காலத்தில் வாழ்கிறோம்.. உணவு வாங்குவது, பொருட்களை வாங்கவது – விற்பது, டாக்ஸி புக் செய்வது… இவை அனைத்துமே உங்களிடம் உள்ள செல்பேசியால் சாத்தியம் ஆகிறது. நம் வாழ்க்கையை வசதிமிக்கதாவும் விரைந்து செயல்படவும் தொழில்நுட்பம் உறுதுணைபுரிகிறது.
உங்களில் பலரும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் இ-வாலட்களைப் தொடர்ந்து பயன்படுத்து கிறீர்கள். ஆயினும், ரொக்கப் பணமில்லா பரிவர்த்தனையின் வழிமுறைகளையும் நன்மைகளையும் உங்களிடம் பகிர்வதற்கு கடமைப்பட்டுள்ளேன்.
அரசின் நடவடிக்கையால், சிறு வணிகர்களும் தொழில்நுட்ப வளர்ச்சியை மென்மேலும் சிறப்பாக பயன் படுத்திக் கொள்ளக் கூடிய தனித்துவமான சரித்திர வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்.
நான் பண மதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பான அறிவிப்பை வெளியிடும்போது, பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாவர்கள் என்பது தெரியும். ஆனால், நீண்ட கால பலன்களுக்காக தற்காலிக சிரமத்தை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று கோருகிறேன்.
நாட்டின் எதிர்கால நலன் கருதி, நம் நாட்டு மக்கள் அனைவரும் தற்காலிக சிரமங்களைப் பொறுத்துக்கொள்வதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
நான் செல்லும் நகரங்களிலும் கிராமங்களிலும் (உ.பி, கர்நாடகம், கோவா மற்றும் பஞ்சாப்) “ஊழலும் கறுப்புப் பணமும் ஒழிக்கப்பட வேண்டுமா?” என்று மக்களை நோக்கிக் கேட்கிறேன். அதற்கு, அவர்கள் ஒருமித்த குரலில் சொல்லும் ஒரே பதில், “ஆம்.”