செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் இருந்த 39,725 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.48,72,800 அபராதம் வசூல் செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல், வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்களில் கூடுவது, முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் உலா செல்வது உள்ளிட்ட விதி மீறல்களை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், முகக்கவசம் அணியாமல் வெளியே நடமாடினால், ரூ.200 அபராதம் விதிக்கப்படும் மற்றும் சுகாதார சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஜான் லூயிஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து, செங்கல்பட்டு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், போலீஸார் முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றியவர்களுக்கு, அபராதம் விதிக்கத் தொடங்கினர்.
மேலும், முகக்கவசம் அணிவித்து, கொரோனா தடுப்பு குறித்து, போலீஸார் அறிவுரை வழங்கினர். செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் காவல்துறை சார்பில் கடந்த 24-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை முகக்கவசம் அணியாதவர்கள் மீது 39,725 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ 48 லட்சத்து 72 ஆயிரத்து800 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதில் கடந்த 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் மட்டும் 3,109 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.3,36,500 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.