
வாஷிங்டன்: சமூக வலைதளங்களில், தான் மட்டுமே ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்ற நோக்கில், தனக்குப் போட்டியாக உருவெடுக்கும் நிறுவனங்களை கையகப்படுத்தும் தொழில்விரோத நடவடிக்கைளில் ஈடுபடுவதாக, பேஸ்புக் நிறுவனத்தின் மீது அமெரிக்க மைய அரசு மற்றும் 48 மாகாண அரசுகள் வழக்குத் தொடுத்துள்ளன.
இதன் காரணமாக, இந்நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் கடும் சரிவை சந்தித்துள்ளன.
இந்நிறுவனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் கூறப்பட்டுள்ளதாவது; தொழில் செய்வதற்கான பொதுநடைமுறைகளை, பேஸ்புக் நிறுவனம் மீறியுள்ளது. தனக்கு போட்டியாக இருக்கும் என்று கருதப்படும் சிறு நிறுவனங்களை மிரட்டுவது, நசுக்குவது என்று, நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி விதிமுறைகளை மீறியுள்ளது.
சமூக வலைதளங்களில் கோலாச்சும் வகையில், போட்டியாக உருவெடுத்த வேறு சில சமூக வலைதளங்களான, வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை விலைக்கு வாங்கி கையகப்படுத்தியது.
பல்வேறு கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களையும் வாங்கி, சந்தையில் தனக்கு எதிராக போட்டியிடக் கூடாது என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு வேறு வாய்ப்புகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. விளம்பரதாரர்கள் மற்றும் நிறுவனங்களும், தங்கள் விளம்பரங்களை வேறு வழிகளில் வெளியிட முடியாத கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
பேஸ்புக் நிறுவனம் சர்வாதிகாரமாக செயல்படுவதை தடுக்க வேண்டும். சந்தையில் போட்டி நிலவ வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அதன்மூலம், பல புதிய முயற்சிகள், கண்டுபிடிப்புகள் வெளிவரும். இனி வேறு நிறுவனங்களை கையகப்படுத்துவதற்கு, அரசின் முன் அனுமதியை பெற உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]