டில்லி:
அரசை விமர்சிப்பதற்காக தேசத்துரோக வழக்கு தொடுக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடைபெறுவது தொடர்பாக விவாதிக்க சிறப்பு கூட்டம் ஒன்றை சமீபத்தில் இந்திய அம்னெஸ்டி அமைப்பு நடத்தியது. இதை எதிர்த்து ஏ.பி.வி.பி. அமைப்பினர் பெங்களூரு காவல்துறையில் புகார் செய்தனர். அதன்பேரில் அம்னெஸ்டி அமைப்பு மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நாடு முழுவதும் அறிஞர்கள், மாணவர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் மீது அரசு தேசத்துரோக வழக்கு பதிவு செய்வதாகவும், இதில் உச்சநீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி, தொண்டு நிறுவனம் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோரை கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல் பிரசாந்த் பூஷன், ‘தேசத்துரோகம் ஒரு கடுமையான குற்றம். ஆனால் கருத்து வேறுபாடுகளை நசுக்குவதற்காக இந்த சட்டம் பயன்படுத்தப்படுகிறது’ என்று வாதிட்டார்.
கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு எதிராக போராடியவர்கள், கார்ட்டூனிஸ்ட் அசீம் திரிவேதி ஆகியோர் மீது கூட தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், ‘அரசை விமர்சிப்பதற்காக சிலர் கூறும் கருத்துகளை தேசத்துரோக சட்டத்தின் கீழ் கொண்டுவரக்கூடாது. இந்திய தண்டனை சட்டம் பிரிவு 124(ஏ)–ஐ (தேசத்துரோகம்) பயன்படுத்துவதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஏற்கனவே உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் நாங்கள் தெளிவாக தெரிவித்துள்ளோம்.
தேசத்துரோக சட்டம் குறித்து நாங்கள் விளக்க வேண்டிய அவசியமில்லை.
இது தொடர்பாக பீகார் மாநில அரசுக்கு எதிரான கேதார்நாத் சிங்கின் வழக்கில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தெளிவாக விளக்கி உள்ளது” என்றும் கூறினர்.
Patrikai.com official YouTube Channel