சென்னை: அண்ணா பல்கலை கழக மாணவி வழக்கின் எஃப்ஐஆர் வெளியான விவகாரத்தில் தேசிய தகவல் மையம் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சியான சி.பி.ஐ (எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சென்னை, கோட்டூர் புரத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அந்த நபர் பாலியல் பலாத்காரத்தை தனது செல்போனில் படம் பிடித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே ஞானசேகரன் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்யும் போது சார் என்று அழைத்து யாரிடமோ பேசியது தெரிய வந்துள்ளது. எனவே ஞானசேகரன் தவிர மேலும் சிலருக்கு இந்த விவாகரத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையில், மாணவி கொடுத்த புகாரின் எஃப்ஐஆர் வெளியானது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சென்னை மாநகர காவல்ஆணையரின் திடீர் பேட்டி மேலும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. இதுகுறித்து நீதிமன்றமும் கடுமையாக விமர்சனம் செய்தது.
இந்த நிலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியே கசிய, தொழில்நுட்ப பிரச்சனையே காரணம் என தேசிய தகவல் மையம் (National Informatics Centre) விளக்கம் அளித்துள்ளது. அதில், ” மாநில குற்ற ஆவண காப்பகம் வழங்கிய பட்டியலின்படி, 64, 67, 68, 70 & 79 போன்ற முக்கியமான பிரிவுகளின் கீழ் யாரும் பார்வையிட முடியாத வகையில் தடை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் சில தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் ஐ.பி.சியில் இருந்து பாரதிய நியாய சன்ஹிதாவுக்கு (BNS) மாற்றும்போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக முதல் தகவல் அறிக்கையினை பொதுவெளியில் யாரும் பார்க்க முடியாமல், தடை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டு விட்டது.
மேலும், இது தொடர்பான பிரச்சனைகளை நாங்கள் மறுபரிசீலனை செய்து வருகிறோம், எஃப் ஐ ஆர் பக்கத்தை பார்வையிடுவதற்கான அனைத்து தடை செய்யும் முக்கிய பிரிவுகள் மற்றும் அதன் துணை பிரிவுகளை முழுமையாக சரி பார்க்கும்படி, மாநில குற்ற ஆவண காப்பகத்தை கேட்டுக் கொண்டுள்ளதாக” அரசு தொடர்பான மின்னணு கோப்புகளை பராமரிக்கும் தேசிய தகவல் மையத்தின் இயக்குனர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.
ஆனால், இதை ஏற்க மறுத்துள்ள மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தேசிய தகவல் மையத்தின் இயக்குனர் அருள்மொழி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” அண்ணா பல்கலை கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை பற்றிய முதல் தகவல் அறிக்கையின் விபரங்கள் வெளிவந்த வழக்கில், தேசிய தகவல் மையத்தை வழக்கு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரணை நடத்த வேண்டுமென சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
அண்ணா பல்கலை கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமையின் முதல் தகவல் அறிக்கை விபரங்கள், வன்கொடுமைக்குள்ளான பெண் விபரங்களோடு வெளியாகி பரவலான கண்டனம் எழுந்தது. இவ்வாறு குற்றமிழைத்த அதிகாரிகள் உள்ளிட்டு கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், சென்னை உயர் நீதிமன்றமும், பல அமைப்புகளும் இது தொடர்பாக கடுமையாக எதிர்வினையாற்றியது.
இந்த நிலையில், முதல் தகவல் அறிக்கை வெளிவந்த குற்றத்திற்கு ஒன்றிய அரசின் தேசிய தகவல் மையமே காரணம் என்று அந்த முகமையின் விளக்கம் மூலம் தெரிய வந்துள்ளது. அதன்படி, புதிய குற்றவியல் சட்டங்களின் பிரிவுகளும், பெயரும் மாற்றப்பட்டிருக்கும் நிலையில் முதல் தகவல் அறிக்கை விபரங்களை மறைக்க முடியாமல் போனதாக தெரிவிக்கின்றன. அவ்வாறானால், புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த ஜூலை மாதமே அமலுக்கு வந்துவிட்ட நிலையில் அப்போதிருந்து நடைபெற்ற எல்லா வழக்குகளிலும் பாதிக்கப்பட்டோர் விபரங்கள் இப்படி கசியவில்லையே, இந்த வழக்கில் மட்டும் விபரங்கள் எப்படி கசிந்தது? என்ற கேள்வி எழுகிறது.
எனவே, கடுமையான குற்றத்திற்கு காரணமான ஒன்றிய தகவல் முகமை மீதும் வழக்கு பதிய வேண்டுமென்றும், இந்த பாலியல் வன்கொடுமை வழக்கின் விபரங்களை வெளியிட்டு அரசியல் ஆதாயம் தேடும் சதி நோக்கம் உள்ளதா என்பதையும் விசாரிக்க வேண்டுமென சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. மேலும், மன உளைச்சலுக்கும், கடும் பாதிப்புக்கும் ஆளாகியுள்ள பெண்ணுக்கு உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி நிவாரணத்தை தாமதமின்றி வழங்க வேண்டும்” என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
அண்ணா பல்கலை.மாணவி பாலியல் விவகாரம்: இரண்டு சேனல்கள் மீது வழக்கு பதிவு! காவல்துறை தகவல்…