சென்னை: அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5% இடஒதுக்கீடு கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழகஅரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றும் வகையில், தமிழகஅரசு 7.5%  உள்ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, அரசு பள்ளி மாணாக்கர்கள் நீட் தேர்வில் வெற்றிபெற்றால், அவர்களுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. நடப்பாண்டில் சுமார் 400 அரசு பள்ளி மாணாக்கர்கள் மருத்துவம் படிக்க தேர்வாகி உள்ளனர்.

இந்த நிலையில்,  தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி கழகம் சார்பில், தங்களது கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணாக்கர்களுக்கும் இடஒதுக்கீட்டின்படி சலுகை வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளது.  மனுவில்,  தங்களது கழகத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 2,400 அரசு உதவி பெறும் தமிழ்வழிப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தங்களுடைய பள்ளிகளுக்கும் அரசுப் பள்ளிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.  அரசுப் பள்ளிகளுக்கான சலுகைகள், கொள்கைகள், பாடத்திட்டம், போதிக்கும் முறை, உதவிகள் அனைத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் பொருந்தும். அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவியர் படிப்பதாகவும் , எனவே எங்களது கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணாக்கர்களுககும் மருத்துவம் படிக்க உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

இந்த வழக்கு,  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா, சரவணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர், பள்ளி கல்வித்துறை செயலாளர்,  உயர்கல்வித்துறை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.