இம்பால்: அரசுக்கு எதிராக போர் தொடுத்ததாக பிரிவினைவாதிகள் இருவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் அறிவித்துள்ளார்.

பிரிவினைவாதிகள் 2 பேர், இங்கிலாந்தில் மணிப்பூரின் நாடு கடத்தப்பட்ட அரசை நிறுவ போவதாக அறிவித்தனர். இது தொடர்பாக லண்டனில் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

அதில், யம்பென் பிரேன் என்பவர் தம்மை, மணிப்பூர் மாநில கவுன்சிலின் முதலமைச்சர் என்று அறிவித்து கொண்டார். அவருடன் மற்றொருவர் இருந்தார். தமது பெயர் நரேங்பாம் சமர்ஜித் என்றும், தம்மை பாதுகாப்பு அமைச்சர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

மணிப்பூர் மாநில கவுன்சில் என்ற பெயரில் நாடு கடத்தப்பட்ட ஒரு அரசாங்கத்தை தொடங்குவதாக அவர்கள் அப்போது அறிவித்தனர். தங்களுக்கு 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரிட்டன் அரசு அரசியல் தஞ்சம் வழங்கப் பட்டதாக கூறி அதற்கான ஆவணங்களையும் இருவரும் வெளியிட்டனர்.

ஆகையால், மணிப்பூரில் இருந்து அரசாங்கம் லண்டனுக்கு மாற்றப்பட்டது. இதுவே மக்களுக்கு நாங்கள் அறிவிக்க சரியான தருணம். ஐநா சபையில் இருக்கும் அனைத்து நாடுகளையும் எங்கள் நாட்டுக்கு அங்கீகாரம் பெற அழைக்கிறோம் என்றும் கூறினர். 3 மில்லியன் மணிப்பூர் மக்கள்  அங்கீகாரம் பெற விரும்புகின்றனர்.

இந்திய அரசுடன் இது தொடர்பாக நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறவில்லை. மாறாக வெறுப்பையும், கசப்புணர்வையும் தந்தன என்று கூறினர்.

லண்டனில் இவர்கள் அளித்த பேட்டி, சர்வதேச அரசியலில் கவனம் பெற்றது. ஆனால் இது குறித்து அங்குள்ள இந்திய தூதரகம் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.

 

இந் நிலையில்,  இது குறித்து மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: 2 பிரிவினைவாதிகள் மீது அரசுக்கு எதிராக போர் தொடுத்ததாக அரசாங்கத்தால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உடனடியாக விசாரிக்க சிறப்பு குற்றப்பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அது தொடர்பான விவரங்கள் கிடைக்க பெற்ற பின்னர், தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்படும் என்றார்.