திருவனந்தபுரம்: கேரளாவில் மேனகா காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் காட்டு யானை உணவு தேடி கிராமத்துக்கு வந்த நிலையில் யாரோ பட்டாசுகள் மறைத்து வைத்த அன்னாசி பழத்தை உணவாக தந்துள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த யானை சில நாட்கள் கழித்து உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக மத்திய வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், விடமாட்டோம். முழுமையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என்றார்.
இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி ஒரு கருத்தை வெளியிட்டு இருந்தார். கடுமையான குற்றச் செயல்களுக்காக அறியப்படும் இடம் தான் மலப்புரம். குறிப்பாக விலங்களிடம் இது அதிகம் நடக்கிறது. வனவிலங்கை கொல்பவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை என்று விமர்சித்து இருந்தார்.
இந் நிலையில் கேரளாவில் மேனகா காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு புகார்களின் அடிப்படையில், மேனகா காந்தி மீது ஒரு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மலப்புரம் காவல் கண்காணிப்பாளர் அப்துல் கரீம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறி இருப்பதாவது: கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தொடர்புடைய கருத்துகள் பரப்புவது, சட்டவிரோதமாக தீங்கு விளைவிப்பவர் சிறைத்தண்டனைக்கு உரியவர் என்றார்.
இதனிடையே, மேனகா காந்தியின் ‘பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் இந்தியா’ என்ற வலைத்தளத்தை கேரள சைபர் வாரியர்ஸ் என்ற அமைப்பு ஹேக் செய்திருந்தது. தற்போது அது மீட்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.