காசர்கோடு
கேரளாவின் காசர்கோடு மாவட்ட கோவிலில் நடைபெற்ற தீவிபத்து காரணமாக நிர்வாக கமிட்டியினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
கேரளாவின் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் அருகே அஞ்சுதம்பலம் வீரராகவ கோவில் காளியாட்ட திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று திருவிழாவின் போது பட்டாசுகள் வெடிக்கப்பட்ஃபு வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.
அதையொட்டி குழந்தைகள், பெரியோர்கள் என ஏராளமானோர் கோவில் வளாகத்தில் திரண்டிருந்தபோது வெடிக்கப்பட்ட பட்டாசுகளில் இருந்து தீப்பொறி பறந்து, அருகில் இருந்த பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த குடோனில் விழுந்துள்ளது. இதனால் அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் மொத்தமாக வெடித்து சிதறின.
இந்த விபத்து கோவிலுக்கு அருகிலேயே ஏற்பட்டதால் அங்கு கூடியிருந்த மக்கள் பலரும் விபத்தில் சிக்கினர். வெடிவிபத்தில் 154 பேர் காயமடைந்து 8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்து நேற்று இரவு 12 மணியளவில் நடந்தது.
காயமடைந்தவர்கள் உடனடியாக காசர்கோடு, கண்ணூர் மற்றும் மங்களூரு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். உடனடியாக மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து மீட்பு பணிகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தினார்.
கோவிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் கோவில் நிர்வாக கமிட்டியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது அனுமதியின்றி வாணவேடிக்கை நடத்தியதற்காகவும், வழிகாட்டுதல்களை மீறியதற்காகவும் 8 கோவில் கமிட்டியினர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.