சென்னை
காவல்துறையிடம் நடிகை ரோகிணி அளித்த புகாரின் அடிப்படையில் மருத்துவர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
ஹேமா கமிட்டி மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு, பிரபல நடிகர்கள் பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக விசாரித்து 2019 இல் அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அறிக்கையில் இடம்பெற்ற தகவல்கள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ் திரை உலகிலும் பாலியல் புகார்கள் பற்றி விசாரணை நடத்துவதற்காக நடிகை ரோகிணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நடிகை ரோகிணி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் டாக்டர் காந்தராஜ் என்பவர் மீது புகார் அளித்திருந்தார்.
ரோகிணி தனது புகாரில்,
“செப்டம்பர் 7 ஆம் தேதி யூடியூப் சேனலில் தமிழ் சினிமா நடிகைகளை பற்றி அவதூறாகவும், மோசமாகவும் டாக்டர் காந்தராஜ் சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார். நடிகைகளை மிகவும் கீழ்த்தரமாகவும், பாலியல் தொழிலாளி போலவும் பேசியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. மறைந்த நடிகைகள் முதல் தற்போதுள்ள நடிகைகள் பற்றி எந்தவித ஆதாரமும் இன்றி பேட்டியளித்துள்ளார்.
நடிகைகள் என்றால் கேமராமேன், எடிட்டர், மேக்கப் மேன், டைரக்டர் என அனைவரிடமும் அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் தான் நடித்து வருகின்றார்கள் என்பது போல பேசியிருப்பது வேதனையளிக்கும் வகையில் உள்ளது. இதுதவிர கொச்சையான வார்த்தைகளை அவர் பயன்படுத்தி உள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு யூடியூப்பில் உள்ள அவரது பேட்டியை நீக்க வேண்டும்”
என்று தெரிவித்திருந்தார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் காவல்துறையினர் டாக்டர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.அவர் மீது 296 (பொது வெளியில் ஆபாசமாக பேசுதல்), 75 (பாலியல் தொந்தரவு), 79 (பெண்களின் மாண்பை அவமதித்தல்), 352 (அவதூறாக பேசுதல்), 67 (தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல்) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.