மதுரை: மதுரை முதல் நாகர்கோவில் வரை டோல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்ககோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மனுவுக்கு பதில் அளிக்க நீதிமன்றம் நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட்டு உள்ளது.
நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.கோவிந்த், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்துள் ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், நாகர்கோவிலிருந்து மதுரை வரை தேசிய நெடுஞ்சாலை 7 நான்கு வழிச்சாலையில் பல மாதங்களாகப் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பராமரிப்புப் பணி காரணமாக பல இடங்களில் நான்கு வழிச்சாலை இரு வழிச்சாலையாகவும், பல கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு வழிச்சாலையாகவும் உள்ளது. இடையிடையே பாலங்கள் கட்டுமானப் பணிகள், பராமரிப்புப் பணிகள் தொடர்கின்றன. இதனால் சாலை மிகவும் மோசமாகவும், சேதமடைந்தும் காணப்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல், பயண நேரம் அதிகரிப்பு, கூடுதல் எரிபொருள் செலவு, வாகன சேதம், உடல்நல பாதிப்பு எனப் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
சாலைகளில் வெள்ளைக்கோடு, ஒளிரும் ஸ்டிக்கர்கள் கூட இருப்பதில்லை. இதனால் இரவு நேரத்தில் விபத்துகள் அதிகமாக நடைபெறுகின்றன. சென்னையில் சாலை பராமரிப்புப் பணி நடைபெறுவதால் சுங்கக் கட்டண வசூலைத் தமிழக அரசு நிறுத்தியது. அதுபோல, சாலை பராமரிப்புப் பணி முடியாத நிலையிலும் நாகர்கோவில் முதல் மதுரைக்கு வரும்போது மறுகால்குறிச்சி, சாலைபுதூர், எட்டூர்வட்டம், கப்பலூர் டோல்கேட்களில் கட்டணம் வசூலிக்கின்றனர். எனவே, சாலை பராமரிப்புப் பணி முடியும் வரை தேசிய நெடுஞ்சாலை 7-ல் நாகர்கோவில் முதல் மதுரைவரை உள்ள 4 டோல்கேட்டுகளில் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் புஷபா சத்யநாராயனா, வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆயிரம் செல்வகுமார் வாதிட்டார். அதையடுத்து, மனு குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத் தலைவர் 2 வாரத்தில் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் 4 டோல்கேட்டுகளிலும் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கப்படும் என்று கூறி விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.