சென்னை

சென்னை உயர்நீதிமன்றத்தில் மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போட அனுமதிக்கும் சட்டப்பிரிவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உலகெங்கும் மாடுகளைக் கட்டுப்படுத்த அவற்றின் மூக்கில் துளையிட்டு மூக்கணாங்கயிறு போடுவது வழக்கமாகும்.    இந்த மூக்கணாங்கயிறு போடுவதை மிருக வதைச் சட்டம் அனுமதிக்கிறது.  இந்த சட்டப்பிரிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவர் வழக்கு மனுத் தாக்கல் செய்தார்.

வழக்கு விசாரணையில் செந்தில் குமார் தரப்பில் ”மாடுகளின் மூக்கு சதையில் துளையிடப்பட்டு மூக்கணாங்கயிறு போடப்படுகிறது.  இது மிகவும் கொடூரமான செயலாகும்.  இதனால் மாடுகள் மிகவும் துன்புறுத்தப்படுகின்றன.” என்னும் வாதம் முன் வைக்கப்பட்டது.

உயர்நீதிமன்றம், “மாடுகளைக் கட்டுப்படுத்த உலக அளவில் இந்த முறை பின்பற்றப்படுகிறது.   உலக வழக்கத்தைப் பின்பற்றி இதற்கான புதிய விதிகளை வகுத்துப் பின்பற்றுவோம்.   இது குறித்து மத்திய மாநில அரசுகள் இன்னும் நான்கு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்துள்ளது.