சென்னை:

க்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி மீது,  குறிப்பிட்ட சமூகத்தை இழிவுப்படுத்துவதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

கையால் மலம் அள்ளும் கொடுமை குறித்து கக்கூஸ் எனும் ஆவணப்படத்தைச் சமூக ஆர்வலர் திவ்யபாரதி அண்மையில் இயக்கி வெளியிட்டார்.  பார்த்தவர் மனம் பதைக்கும்படி இருந்த இந்த ஆவணப்படம் பரவலான வரவேற்பைப் பெற்றது. அதே நேரம் பல இடங்களில் இந்த படத்தைத் திரையிட காவல்துறை அனுமதி மறுத்த சம்பவங்களும் நடந்தது.

இதற்கிடையே கடந்த 2009ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கில் ஆஜராகாமல் இருந்ததால் திவ்யபாரதி கைது செய்யப்பட்டார். உடனடியாக அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், “இயக்குநர் திவ்ய பாரதி, கக்கூஸ் ஆவணப்படத்தில்  தேவேந்திரகுல வேளாளர் என்னும் பள்ளர் இன மக்களும் கையால் மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளதாக காண்பித்துள்ளார். இது தேவேந்திரகுல வேளாலர் இன மக்களை அவமதிப்பதாக உள்ளது” என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து இயக்குநர் திவ்யபாரதிக்கு மிரட்டல் அலைபேசி அழைப்புகள் நிறைய வந்தன. ஆபாசமாகவும் பலர் அலைபேசினர். அவர்களில் பலர் டாக்டர் கிருஷ்ணசாமியின் தொண்டர்கள் என்று தெரிவித்துக்கொண்டதாகவும் அவர்களுக்கு கிருஷ்ணசாமி அறிவுரை கூற வேண்டும் என்றும் திவ்யபாரதி தெரிவித்தார். மேலும் பாஜகவைச் சேர்ந்த பலரும் தனக்கு மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

மிரட்டல் மற்றும்  ஆபாச போன் கால்களுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும் தான் ஏதும் செய்ய இயலாது என்றும்  patrikai.com  இதழுக்கு அளித்த பேட்டியில் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

இதற்கிடையே கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் பாஸ்கரன் மதுரம் காவல்துறையில் ஒரு புகார் அளித்தார். அதில், கக்கூஸ் ஆவணப்படத்தில் தேவேந்திரகுலவேளாளர் இனத்தவரை இழிவபடுத்தியிருப்பதாக திவ்யபாரதி மீது குற்றம் சாட்டினார். இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்த குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தியதாக காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.