கோவை: தமிழக காங்., முன்னாள் தலைவர் தங்கபாலு, அவரது மனைவி, மகன் மீது, கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார், மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவையை சேர்ந்தவர், வி.வி.வாசன்; த.மா.கா., கோவை மாவட்ட தலைவராக பொறுப்பு வகிக்கிறார். இவர், கோவை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
“சிங்காநல்லூரில் இயங்கி வந்த, ‘கமலா டெக்ஸ்டைல் மில்’ நிறுவனம், 2006ல், ஏலத்துக்கு வந்தது. அந்த மில்லை, தமிழக காங்., தலைவராக இருந்த தங்கபாலு, அவரது பெயருக்கு ஏலம் எடுக்க, என்னை நியமித்தார். அதன்படி, 20 கோடி ரூபாய்க்கு, மில்லை ஏலம் எடுத்து கொடுத்தேன்.அதன்பின், ‘கமலா மில்’ என்பது, ‘தாமரை மில்’லாக மாற்றப்பட்டது. தாமரை மில்லுக்கு, நிர்வாக பொறுப்பாளராக, என்னை நியமித்தார். அப்போது, லாபத்தில், 10 கோடி ரூபாயும்; 20 சென்ட் இடமும் தருவதாக, என்னிடம் உறுதி அளித்தார். கடந்த, 10 ஆண்டுகளாக, மில்லை திறம்பட நிர்வகித்து, பல கோடி ரூபாய் லாபம் ஈட்டி கொடுத்தேன். லாபத்தில் பங்கு கேட்ட போது, தர மறுத்த அவர், மில்லை, வேறு பெயருக்கு மாற்றம் செய்து, இயக்குனராக, அவரது மனைவி ஜெயந்தி தங்கபாலு, மகன் கார்த்திக் ஆகியோரை நியமித்தார். மேலும், என்னை மிரட்டினார். லாபத்தில் பங்கு தருவதாக கூறி, நம்பிக்கை மோசடி செய்த தங்கபாலு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், மூவர் மீதும் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணைய துவக்கியிருக்கிறார்கள்.