சென்னை: கொரோனா தொற்று மீண்டும் பரவாமல் தடுக்க டாஸ்மாக் பார்களை மூட உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 21ம் தேதி நிலவரப்படி 47 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரிக்கு பின் கொரோனா நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
ஆகையால் பல நகரங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று மீண்டும் பரவாமல் தடுக்க டாஸ்மாக் பார்கள், திரையரங்குகள், வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றை மூட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி உள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.