மதுரை
மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் நீதிமன்ற நிபந்தனைகளை மீறியதாக பவன் கல்யாண், அண்ணாமலை உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது,

கடந்த ஜூன் 22-ம் தேதி மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டின் முன்னாள் பா.ஜ.க தலைவர் கே. அண்ணாமலை மற்றும் மாநாட்டின் முக்கிய அமைப்பாளர்கள் மீது திங்கள்கிழமை இரவு கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை ஈ3 அண்ணாநகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், உயர் நீதிமன்றத்தின் மத மற்றும் அரசியல் கருத்துகள் மீதான கட்டுப்பாடுகள் மீறப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத நல்லிணக்கத்திற்கான மதுரை மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் வழக்கறிஞருமான எஸ். வாஞ்சிநாதனால் பதிவு செய்யப்பட்டுள்ள புகாரில்..
“மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட உரைகளும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் வகுப்புவாத விரோதத்தைத் தூண்டுவதாகவும், மத மற்றும் அரசியல் கருத்துகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து மாநாட்டிற்கு அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் நிபந்தனைகளை மீறியுள்ளது.”
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்த வழக்கில்குற்றவாளிகளாக இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், அதன் மாநிலச் செயலாளர் எஸ். முத்துகுமார், பவன் கல்யாண், அண்ணாமலை மற்றும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, இந்து முன்னணி மற்றும் தொடர்புடைய சங்கப் பரிவார் குழுக்களின் அடையாளம் தெரியாத ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.