கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு மகேஷ் பட் இயக்கும் திரைப்படம் ‘சடக் 2’. இது 1991-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘சடக்’ படத்தின் இரண்டாவது பாகம். இதில் அவரது மகள்கள் ஆலியா பட், பூஜா பட் என இருவரும் நடிக்கின்றனர்.
சுஷாந்த் மறைவுக்கு பின் சினிமா வாரிசு அரசியலுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில் பல்வேறு வாரிசுகள் இணைந்துள்ள இந்தப் படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் குரல் கொடுத்தனர்.
இந்நிலையில் தற்போது ‘சடக் 2’ படத்துக்கு மற்றொரு பிரச்சினை உருவாகியுள்ளது.
‘சடக் 2’ படத்தின் போஸ்டரில் இந்துக்களின் கடவுளான சிவன் வசிக்கும் கைலாஷ் மானசரோவர் மலையின் படம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, படத்தின் பெயரும், படத்தின் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர் ஆகியோரின் பெயர்களும் மலைக்கு மேலே எழுதப்பட்டுள்ளன. அந்த புனிதமான மலையை விட அவர்களின் பெயர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இது இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது என உத்தர பிரதேச மாநிலம் மஹராஜ்கன்ஜ் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஷவுரப் பாண்டே வரும் செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளார்.