டெல்லி: உதயநிதியின் சனாதன பேச்சுக்கு எதிராக 6 மாநிலங்களில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை சென்னைக்கு மாற்றக்கோரிய வழக்கில், உச்சநீதி மன்றம் மாநிலங்கள் உள்பட மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கடந்தாண்டு (2023) செப்டம்பா் மாதம் தமிழக முற்போக்கு எழுத்தாளா்கள் சங்க கூட்டத்தில் கலந்துகொண்ட பேசிய தமிழக அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறினார். உதயநிதியின் பேச்சு நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாஜக மற்றும் வலதுசாரி ஆதரவாளா்கள் மத்தியில் எதிா்ப்பு கிளம்பியதோடு உதயநிதி மீது மகாராஷ்டிரம், கா்நாடகம், ராஜஸ்தான், பிகாா், உ.பி., ஜம்மு-காஷ்மீா் ஆகிய 6மாநிலங்களில் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப் பட்டது. இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி அம்மாநில நீதிமன்றங்கள் சம்மன் அனுப்பி வந்தன.
இந்த நிலையில், வெளிமாநில காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட இந்த முதல் தகவல் அறிக்கைகளையும், நீதிமன்ற வழக்குகள் அனைத்தையும் சென்னை தேனாம்பேட்டை இ-3 காவல் நிலையத்திற்கு மாற்றக் கோரி உதயநிதி சாா்பில் உச்சநீதிமன்றத்தில் (கடந்த மாா்ச் மாதம்) ரிட் மனுவை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் பல்வேறு திராவிடத் தலைவா்களின் அடிச்சுவடுகளை பின்பற்றும் உதயநிதி ஸ்டாலின் திராவிட சித்தாந்தத்தை கடைப்பிடித்து பிரசாரம் செய்து வருகிறாா். அவருக்கு எதிராக பல்வேறு பாஜக ஆளும் மாநிலங்களில் வழங்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் அங்கு அவருக்கு பாதுகாப்பு இல்லை. குறிப்பாக உ.பி. மாநிலத்தில் அயோத்தியில் உள்ள தபஸ்வி சாவ்னி கோயில் அா்ச்சகரே ஒருவா் தலையை துண்டிக்கும் அளவில் பேசியுள்ளாா் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த வழங்குகள் அனைத்தும் ஒன்றிணைத்து சென்னையில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடுமாறு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா அமா்வு முன் மனு விசாரணைக்கு வந்தபோது, ‘இந்த ரிட் மனு அரசமைப்புச் சட்டப்பிரிவு 32-இன் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு உத்தரவிட முடியாது. குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 406-இன் கீழ் தாக்கல் செய்யப்படும் பட்சத்திலேயே அனைத்து வழக்குகளையும் ஒன்றிணைத்து ஒரு இடத்திற்கு மாற்றும் விவகாரம் குறித்து விசாரிக்க முடியும்’’ என உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டு மனுவை திருத்தவும் அனுமதித்தனா்.
இதையடுத்து, உதயநிதி ஸ்டாலின் சாா்பில் திருத்தப்பட்ட மனுவை வழக்கறிஞர்கள், பி.வில்சன், பூா்விஷ் ஜிதேந்திர மல்கான் ஆகியோா் மே 3ஆம் தேதி தாக்கல் செய்தனா். தொடா்ந்து இந்தவழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா அமா்வு முன் நடைபெற்றது.
மனுதாரா் உதயநிதி சாா்பில் அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன், அதுல் சிட்லே உள்ளிட்டோா் ஆஜராகினா். அப்போது, கடந்த விசாரணையின்போது, உச்சநீதிமன்ற நீதிபதி கூறியதைப் போலவே மனுவில் திருத்தங்கள் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த திருத்தங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த மனுவில் மேலும் புதிதாக சிலரும் இணைந்திருப்பதாக கூறி அவா்கள் உள்ளிட்டவா்களும் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பித்து மனு விசாரணையை ஒத்திவைத்தனா்.