சென்னை:  சபாநாயகர் அப்பாவு மீதான அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அதை எதிர்த்து அதிமுக தரப்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு  செய்யப்பட்டு உள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு-க்கு எதிரான அவதூறு வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தால்  ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக செய்தித் தொடர்பாளர் ஆர்.எம். பாபுமுருகவேல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய  திமுகவைச் சேர்ந்த சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த நேரத்தில், அதிமுகவை சேர்ந்த 40 எம்எல்ஏ-க்கள் திமுகவில் இணையத் தயாராக இருந்ததாகவும், ஆனால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பெரிய மனதுடன் அதை ஏற்க மறுத்துவிட்டார் எனவும் பேசியிருந்தார்.

அப்பாவுவின் பேச்சுக்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது அதிமுக எம்எல்ஏக்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில்,  அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் ஆர்.எம். பாபு முருகவேல்  அப்பாவு மீத அவதூறு வழக்கு  தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு எம்எல்ஏ-களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.  இதற்கிடையில் தன்மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பாவு மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை  விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப்பாவு மீதான குற்ற அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து,  அதிமுக செய்தி தொடர்பாளர் ஆர்.எம்.பாபுமுருகவேல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.