மதுரை: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாளை பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதை எதிர்த்துதொடரப்பட்ட வழக்கில்,  நேரடி வகுப்பில் கலந்துகொள்ள வேண்டும்என்பது கட்டாயமில்லை என அரசு தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நெல்லையை சேர்ந்த அப்துல் வஹாப் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்,செப்டம்பர் 1ந்தேதி பள்ளிகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வில் நடைபெற்றது. அப்போது,  அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதிலில், பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்றாலும்  ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

அதுபோல, உயர்கல்வித்துறை சார்பில் தாக்கல் செய்த பதிலில், பள்ளிகளில்,  சமூக இடைவெளியை பின்பற்றுவது, மாஸ்க் அணிவது உள்ளிட்ட வழிகாட்டல்கள் முறையாக பின்பற்றப்படும். வகுப்புக்கு 50 விழுக்காடு குறைவாகவே மாணவர்கள் அழைக்கப்படுவர். அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு அனைத்து வல்லுநர்களுடன் ஆலோசித்தே இத்தகைய முடிவை எடுத்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  நேரடியாக வகுப்புகளுக்கு வருமாறு மாணவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்பதே நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், மாணவர்கள் நேரடி வகுப்பிற்கு வர வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் எனக் கூறப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட  நீதிபதிகள்,  தமிழ்நாட்டில் பள்ளிகளை திறக்க தடையில்லை. மாணவர்களை பள்ளிகளுக்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இது குறித்து அரசுத் தரப்பில் விரிவாக பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.