சென்னை: நீட் தாக்கம் குறித்து ஆராய தமிழ்நாடு அரசு அமைத்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஏகே.ராஜன் குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் முரணான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், மனு தொடர்பாக மத்திய, மாநிலஅரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்ற நிலையில், நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிவ்ல குழு அமைத்து ஆய்வு செய்து வருகிறது. இதை  எதிர்த்து பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் முரணான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க முடியாது கூறியதுடன், நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்கு குழு அமைக்க உச்ச நீதிமன்ற அனுமதி பெறப்பட்டதா? என்று கேள்வி எழுப்பியது.

இதையடுத்து, ஆஜரான தமிழகஅரசின்  தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்,  நீட் தேர்வின் பாதிப்பு பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழுவுக்கு எதிரான பாஜகவின் வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது; திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்ததன் அடிப்படையில் கொள்கை முடிவாக குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், நீட் தேர்வு கிராமப்புற, ஏழை மாணவர்களை பாதிக்கிறது என்று விளக்கம் அளித்தார்.  இதை தொடர்ந்து கரு. நாகராஜன் வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதில் தர உத்தரவிட்டு வழக்கு 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.