டில்லி:
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்து, மத்தியஅரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்த இந்திய அரசியல் சாசன சட்டம் 370 மற்றும் 35ஏ பிரிவுகளை மத்தியஅரசு சமீபத்தில் ரத்து செய்தும், அத்ந மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்து தீர்மானமும், திருத்த மசோதாவுக்கும் கொண்டு வந்து பாராளு மன்றத்தில் நிறைவேற்றியது. மேலும், இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து, அரசிதழிலும் அச்சேற்றப்பபட்டு உள்ளது.
முன்னதாக காஷ்மீரில் படைகள் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், காஷ்மீர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு இருக்கும் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. மேலும், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து எம்.எல்.சர்மா என்ற வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும், காஷ்மீரைச் சேர்ந்த பத்திரிகை ஒன்றும் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், காஷ்மீரிலும், ஜம்மு பகுதியின் சில மாவட்டங்களிலும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகக்குழுவினர் சுதந்திரமாக சென்று வருவதற்காக, கட்டுப்பாடுகளை விலக்கக்கோரியும், காஷ்மீர் முழுவதும் கடந்த 4-ந் தேதி முதல் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளதால் காஷ்மீரின் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டி இருந்தார்.
இதைத்தவிர தேசிய மாநாடு கட்சி தலைவரும், முன்னாள் சபாநாயகருமான முகமது அக்பர் லோன் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரி வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
இந்த வழக்குகள் அனைத்தும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எஸ்.ஏ.நசீர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.