டெல்லி: தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநர் மீது உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் 2வது கட்ட விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 24ந்தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரும் திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய பல மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருந்து வந்தது. இதை கண்டித்து, ஆளுநர் ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும் என கூறி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுமீதான விசாரணை தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வில் கடந்த நவம்பர் 10ம் தேதி விசாரிக்கப்பட்டது. அப்போது, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் கையெழுத்திடாமல் கிடப்பில் போட்டு வைத்திருந்ததாக தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டியது. மனுக்களை கிடப்பில் போட்டு அரசின் செயல்பாடுகளை ஆளுநர் முடக்கி வைக்கிறார் என்றும் பணி நியமனம் தொடங்கி எந்த ஒரு கோப்புகளுக்கும் அனுமதி கொடுக்க ஆளுநர் மறுப்பு தெரிவிக்க வேண்டும் தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டியிருந்தது.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ஆளுநர்களின் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்ததுடன், இதுதொடர்பாக மத்தியஅரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை 20ந்தேதிக்கு ஒத்தி வைத்தது. இதையடுத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில், ஆளுநரின் செயல்பாட்டால் 8 கோடி பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் தரப்பு தெரிவித்துள்ளது. 8 கோடி மக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை உள்ளது. ஒவ்வொரு முறையும் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்துக்கு வந்துகொண்டிருக்க முடியாது. எந்தக் காரணமும் கூறாமல் மசோதாக்களை நிராகரித்துள்ளார் ஆளுநர் என்றுதெரிவித்தார்.
அப்போது பேசிய நீதிபதிகள், “3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்? 2020ம் ஆண்டு ஜனவரியில் இருந்து மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. உச்சநீதிமன்றம் கடந்த 10ம் தேதி ஆணை பிறப்பித்தது. 13ம் தேதி மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளார். அரசியல் அமைப்பு சட்டத்தின் 200வது பிரிவின் படி, மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதாக கூற முடியாது. சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால், அது நிதி மசோதாவிற்கு நிகரானதாக மாறிவிடும்” என கூறினார்.
தொடர்ந்து, கேரள ஆளுநருக்கு எதிராக அம்மாநில அரசு தொடர்ந்த வழக்குடன், தமிழக ஆளுநருக்கு எதிராக மாநில அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கும், வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். விசாரணையைத் தொடர்ந்து, அடுத்த விசாரணையை உச்சநீதிமன்றம் நவம்பர் 24-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.