கன்னியாகுமரி: புயல் முன்னெச்சரிக்கையாக இன்று மாலை 4 மணிக்குள் கரை திரும்பாத மீனவர்கள் மீது வழக்கு பதியப்படும் என்று குளச்சல் துறைமுகத்தில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடப்பட்டது.
தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது புயலாக மாறி அதற்கு புரெவி என்றும் பெயரிடப்பட்டு உள்ளது. இந்த புயலின் எதிரொலியாக, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. கரையில் உள்ள படகுகளை பத்திரமாக கடற்கரையில் நிறுத்தி வைப்பதற்கான நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.
இந் நிலையில் புயல் முன்னெச்சரிக்கையாக இன்று மாலை 4 மணிக்குள் கரை திரும்பாத மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என குளச்சல் துறைமுகத்தில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடப்பட்டது. இந்த அறிவிப்பால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.