டி.ஜி.பி ஜாபர்சேட்டுக்கு எதிரான வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
2006 – 2011 ஆண்டு திமுக ஆட்சி காலத்தின் போது உளவுத்துறை ஐஜியாக பணியாற்றியவர் ஜாபர்சேட். தற்போது சிபிசிஐடி டிஜிபியாக பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி உள்பட சிலருக்கு கடந்த 2009-ம் ஆண்டு திருவான்மியூரில் அரசு விருப்ப ஒதுக்கீட்டின் கீழ் வீட்டுமனை ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி ஜாபர்சேட் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கூட்டுசதி, முறைகேடு, ஊழல் தடுப்பு உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
ஜாபர்சேட் ஐ.பி.எஸ். அதிகாரி என்பதால் அவர் மீது வழக்குபதிவு செய்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய மத்திய அரசிடம் முறையான அனுமதியை தமிழக அரசு பெற வேண்டும். ஆனால் அந்த அனுமதியை பெறாமலேயே சென்னையில் உள்ள ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
இதில் ஜாபர்சேட் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பம் செய்துள்ளோம். அந்த அனுமதி கிடைத்ததும் அதை முறையாக கோர்ட்டில் தாக்கல் செய்வோம் என்று போலீசார் உத்தரவாதம் அளித்திருந்தனர். இதை ஏற்றுக்கொண்ட சிறப்பு கோர்ட்டு அந்த குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்றது. ஆனால் ஜாபர்சேட் மீது வழக்குபதிவு செய்யவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்க மறுத்து உத்தரவிட்டது. இந்த உத்தரவின் நகலை விசாரணை கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாபர்சேட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ”தமிழக டி.ஜி.பி.யாக இருக்கும் நிலையில், வருகிற ஜூன் மாதத்துடன் ஓய்வு பெறுகிறேன். சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பி. பதவிக்கு என்னுடைய பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. என் மீது வழக்குப்பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்க மறுத்து உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவு நகலை சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்தும், இதுவரை நீதிபதி எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார். எனவே எனக்கு எதிராக சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறி இருந்தார். இந்த வழக்கை நீதிபதி ராஜமாணிக்கம் விசாரித்தார்.
ஜாபர்சேட்டுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கினால் மட்டுமே குற்றப்பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்க வேண்டும். அனுமதி இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையை கீழ்கோர்ட்டு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்யவில்லை என்றால் நீதிமன்ற விசாரணையை தவறாக பயன்படுத்துவதற்கு சமமாகி விடும். எனவே ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாபர்சேட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிடுகிறேன் என்றார்.
ஜாபர்சேட் மீதான குற்றச்சாட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவர் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. பதவி பெறுவதற்கான முழு தகுதி பெறுகிறார். இதற்கான பட்டியலில் ஜாபர்சேட் தான் சீனியராக உள்ளார். எனவே விரைவில் தமிழக டி.ஜி.பி. பதவி அவருக்கு கிடைக்கும் என தெரிகிறது.