பாட்னா

பிரபல இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீதான தேசத் துரோக வழக்கைப் பீகார் காவல்துறை ரத்து செய்துள்ளது.

பிரதமர் மோடிக்கு 49 பிரபலங்கள் இணைந்து கடிதம் ஒன்றை எழுதி இருந்தனர்.  அதில் கும்பல் வன்முறைக் கொலைகளைத் தடுக்க அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.   இதில் பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி,  அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கையெழுத்து இட்டிருந்தனர்.   இதை எதிர்த்து சுதிர்குமார் ஓஜா என்னும் ஆர்வலர் பீகார் மாநில காவல்துறையிடம்  புகார் அளித்தார்.

அந்தப் புகாரை ஒட்டி பீகார் மாநிலக் காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவின் தேசத் துரோக வழக்கு ஒன்றைப் பதிந்து விசாரணை நடத்தினர்.   இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு அலை எழுந்தது.   இந்த புகார் குறித்து முசாபர்பூர் காவல் கண்காணிப்பாளர் மனோஜ் குமார் சின்கா செய்தியாளர்களைச் சந்தித்தார்.   அப்போது அவர் இந்த வழக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

மனோஜ்குமார் சின்கா, “இந்த தேசத் துரோக வழக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் தொடரப்பட்டது    ஆனால் புகார் அளித்த சுதிர்குமார் ஓஜா நீதிமன்றம் அறிவித்தபடி சரியான ஆதாரங்களை அளிக்கவில்லை.   அத்துடன் அவர் அளித்த  புகார் முழுக்க முழுக்க சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் உள்ளது.

ஆகவே மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரமுகர்கள் மீதான தேச துரோக வழக்கை ரத்து செய்யப் பீகார் காவல்துறை முடிவு எடுத்துள்ளது.    அது மட்டுமின்றி ஆதாரமற்ற புகார் அளித்து தேவையற்ற பதட்டத்தை உருவாக்கிய சுதிர் குமார் மீது பீகார் காவல்துறை நடவடிக்கை எடுக்க உள்ளது” எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.