பாலா

கந்துவட்டி கொடுமையால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், குடும்பமே தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சிகர சம்பவம் நடந்தது. கந்துவட்டிக்காரருக்கு ஆதரவாக காவல்துறையினர் தங்களை மிரட்டுகிறார்கள் என்று அந்தக் குடும்பம் பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதையடுத்தே தற்கொலை முடிவை எடுத்தது அந்தக் குடும்பம்.

இதைக் கண்டித்து, கார்டூனிஸ்ட் பாலா, கார்டூன் ஒன்றை வரைந்தார். அதில் நெல்லை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல்துறை ஆணையர், தமிழக முதல்வர் ஆகியோரை கிட்டதட்ட நிர்வாணமாக வரைந்திருந்தார்.

முரளிகிருட்டிணன் சின்னதுரை பதிவு

இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் புகார் அளிக்கவே, பாலா கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவரது கைதை கண்டித்தும், ஆதரித்தும் சமூகவலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அவர்களில் சிலரது கருத்து கவனத்தை ஈர்க்கிறது. அவற்றில் ஒன்று, ஊடகவியலாளர் முரளிகிருட்டிணன் சின்னதுரை அவர்களின் கருத்து. அவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:

முரளிகிருட்டிணன் சின்னதுரை

“நான் கார்ட்டூனிஸ்ட் பாலாவின் கருத்துகளையோ, அவரது கேலிச் சித்திரத்தையோ ஒருபோதும் ஆதரித்தது இல்லை. இன்னும் சொல்லப் போனால் நான்காண்டுகளுக்கு முன்பு கார்ட்டூனிஸ்ட் பாலா தமிழ்த்தேசியம் முகம் கொண்ட பிற்போக்குவாதி என்று முகநூலில் எழுதியதற்காக கார்ட்டூனிஸ்ட் பாலாவால் நான் மிரட்டப்பட்டேன். எந்த ஊடகங்களிலும் நான் வேலைப் பார்க்க முடியாது என்று அலைபேசி அழைப்பில் மிரட்டியவர் தான் கார்ட்டூனிஸ்ட் பாலா.

இருந்தும் இன்று அவர் கைது செய்யப் பட்டதற்கு காவல்துறையையும், தமிழக அரசையும் கண்டிக்கிறேன்! காரணம் இது கருத்து சுதந்திரத்திற்கு விடுக்கப் படும் அச்சுறுத்தல். இத்தருணம் அவரது கைதை கொண்டாட வேண்டிய தருணம் அல்ல! காரணம் இப்போது கூராக்கப் படும் முனை நாளை நம்மை குத்தும் என்பது தான் !” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

பாலா கைது செய்யப்பட்டது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்று  சில,பலர் கருத்திடும் நிலையில், ஒருவரது கருத்துக்கு எதிராக பாலா மிரட்டியிருக்கிறார் என்ற இந்த பதிவு கவனம் பெற்றுள்ளது.