கர்நாடக இசையில் முடிசூடா மன்னராக விளங்கிய இசை மாமேதை பாலமுரளி கிருஷ்ணா தனது ரசிகர்களை மீளாதுயரில் ஆழ்த்திவிட்டு இறைவனடி சேர்ந்தார். அவருக்கு வயது 86 ஆகும். இவர் தியாகராஜரின் ஐந்தாம் தலைமுறை இசை வாரிசாவார்.
ஆந்திராவின் சங்கரகுப்தம் என்ற ஊரில் 1930-ஆம் ஆண்டு ஜூலை 6-தேதி பிறந்தவர் பாலமுரளி கிருஷ்ணா, தனது 5-வது வயதிலேயே பாடத்துவங்கி விட்டார். 8-வது வயதில் முதன்முதலாக கர்நாடக இசை மேடைக் கச்சேரிகளில் பாடத்துவங்கினார். இவரது தந்தை பட்டாபிராமையாவும் மிகச்சிறந்த இசைக்கலைஞராவார். பாலமுரளி கிருஷ்ணா தலைசிறந்த பாடகர் என்பது மட்டுமன்றி வீணை, கஞ்சிரா மற்றும் மிருதங்கம் ஆகிய இசைக்கருவிகளையும் வாசிப்பதில் கைதேர்ந்தவராவார்.
பத்மபூஷன், பத்மவிபூஷன், பத்மஶ்ரீ மற்றும் செவாலியர் போன்ற விருதுகளை அள்ளிக்குவித்தவராவார், நாம் இசையை தன்னலமின்றி தொடர்ந்தால் விருதுகள் நம்மை தொடரும், அப்படி அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை இசைப்பணியை நான் தொடருவேன்” என்று அவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
பாலமுரளி கிருணா திரைத்துறையிலும் தனது இசைப்பங்களிப்பை வழங்கியுள்ளார். 400க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ள பாலமுரளி கிருஷ்ணா, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 8 மொழிகளில் பாடியுள்ளார். பக்த பிரகலாதா என்கிற தெலுங்குப் படத்தில் நடித்தும் இருக்கிறார். தமிழில் 1977-ல் கவிக்குயில் படத்தில் இளையராஜா இசையமைப்பில் இவர் பாடிய “சின்ன கண்ணன் அழைக்கிறான்” பாடல் மிகவும் புகழ்பெற்றது. 1976-ஆம் ஆண்டு ஹம்சகீதே என்கிற கன்னடப் படத்துக்காகப் சிறந்த பாடகருக்கான விருதைப் பெற்றார். அதன் பின்னர் 11 வருடங்கள் கழித்து, “மாதவச்சாரியா” என்கிற படத்துக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்றார். 2009-ல் வெளியான பசங்க படத்திலும் அன்பாலே அழைக்கும் வீடு என்கிற பாடலைப் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.