இங்கிலாந்தின் யார்க்ஷயர் துறைமுகம் அருகே வட கடலில் இரண்டு கப்பல்கள் மோதிக் கொண்டதில் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சரக்கு கப்பலின் கேப்டன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
திங்களன்று நடைபெற்ற இந்த சம்பவத்தில் அந்த இரண்டு கப்பலில் இருந்தும் 36 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டனர்.

அமெரிக்க ராணுவத்துக்கு தேவையான 35 மில்லியன் லிட்டர் ஜெட் எரிபொருளை கிரீஸ் நாட்டில் இருந்து ஏற்றிச் சென்ற ராணுவ ஒப்பந்த கப்பல் இம்மாகுலேட் என்ற கப்பலுடன் போர்துகீஸ் கொடியுடன் சோடியம் சயனைடு எனும் நச்சு மிகுந்த வேதிப் பொருளை ஏற்றிச் சென்ற ஸோலோங் என்ற சரக்கு கப்பல் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்தது.
இதில் இம்மாகுலேட் என்ற அமெரிக்க ராணுவ ஒப்பந்த கப்பலில் இருந்த 23 பேரும் ஸோலோங் என்ற கப்பலில் 14 பேரும் இருந்ததாகக் கூறப்படும் நிலையில் ஜெர்மனைச் சேர்ந்த எர்ணஸ்ட் ரஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஸோலோங் சரக்கு கப்பலில் இருந்த ஒருவர் மாயமானதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பாக ஸோலோங் சரக்கு கப்பலின் கேப்டன் மீது அலட்சியமாக செயல்பட்டது மற்றும் ஆட்களை கொலை செய்யும் நோக்கில் செயல்பட்டது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு கப்பலிலும் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் இருந்ததால் தீயால் கப்பலின் பாகங்கள் வெடித்துச் சிதறுவதை அடுத்து அந்த பகுதியில் ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு எந்த ஒரு கப்பலும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த கப்பலில் இருந்து வெளியேறும் நச்சுப் பொருளால் அந்த கடற்பகுதியில் சுற்றுசூழல் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மூன்று கிலோமீட்டர் சுற்றளவுக்கு காற்று மாசுபாடு ஏற்பட்டு சுவாச கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் எந்த ஒரு நாசவேலையில் இருக்காது என்று கூறப்பட்டுள்ள போதும் சதி வேலை குறித்த விசாரணையை தவிர்க்க முடியாது என்று இங்கிலாந்து தெரிவித்துள்ளது.