சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, பரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’.

அமேசான் ஓடிடியில் இப்படம் வெளியாகியுள்ளது. திரையுலகினர் பலரும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது ‘சூரரைப் போற்று’ படம் பார்த்துவிட்டு ஜி.ஆர்.கோபிநாத் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“சூரரைப் போற்று… நிறையக் கற்பனை இருந்தாலும், என்னுடைய புத்தகத்தின் மையக் கருவை அற்புதமாகப் படம்பிடித்துள்ளது. உண்மையான ரோலர் கோஸ்டர் அனுபவம். ஆம், நேற்றிரவு பார்த்தேன். நினைவுகளைத் தூண்டிய பல குடும்பக் காட்சிகளில் சிரிப்பையும் அழுகையையும் கட்டுப்படுத்த முடியவில்லை.

நாடகத்தன்மை இருந்தாலும், பெரும் முரண்பாடுகளுடன் கூடிய பின்தங்கிய கிராமப்புறப் பின்னணியைக் கொண்ட ஒரு தொழில்முனைவோரின் போராட்டங்கள் மற்றும் இன்னல்களுக்கு எதிரான நம்பிக்கைக்கு உண்மை சேர்க்கிறது.

என் மனைவி பார்கவியாகச் சித்தரிக்கப்பட்டுள்ள அபர்ணா சரியான தேர்வு. தனக்கென்று கனவுகளுடன் கூடிய, வலிமையான அதே நேரம் மென்மையான, ஆர்வம் நிறைந்த அச்சமில்லாத ஒரு பெண்ணான அவர் கிராமப்புறப் பெண்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கிறார்.

கனவுகளை நனவாக்கும் பைத்தியக்காரத்தனத்தை மனதில் கொண்டிருக்கும் ஒரு தொழில்முனைவோர் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யா தனது சக்திவாய்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதுபோன்ற இருண்ட காலங்களில் உத்வேகம் அளிக்கக் கூடிய திரைப்படம்.” என கூறியுள்ளார்.