சிகாகோ: அனைவருக்கும் சமமான வாய்ப்பளிக்க தவறுவதால், முதலாளித்துவம் தற்போது ஆபத்தில் உள்ளது என்று இந்தியாவின் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, “அனைவருக்கும் வாய்ப்பளிக்க தவறுகையில், முதலாளித்துவத்திற்கு எதிராக பலரும் கிளர்ந்தெழுந்து புரட்சி செய்வார்கள்.

முன்பெல்லாம், சுமாரான ஒரு கல்வித் தகுதியை வைத்து, ஒரு நடுத்தரமான வேலையை வாங்கிவிட முடியும். ஆனால், 2008ம் ஆண்டில் நிகழ்ந்த பொருளாதார மந்த நிலைக்குப் பிறகு, நிலைமை மாறி, வேலைவாய்ப்பு என்பது சிக்கலானதாக மாறிவிட்டது.

அந்தவகையில், அதிகமான அளவில் கல்வி கற்றிருந்தால்தான், உங்களால் வெற்றியடைய முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

உலகளாவிய வர்த்தக சக்திகளால் பாதிக்கப்பட்ட சமூகங்கள், தங்களுடைய உறுப்பினர்களை உலகளாவிய பொருளாதாரத்திற்கு தயார்செய்யும் சக்தியை இழந்து, மாறாக, பள்ளிகளை நாசம் செய்து, குற்றங்களை அதிகரிக்கச் செய்து, சமூகத்தை பலவீனமாக்குகின்றன.

முதலாளித்துவத்தின் சமத்துவமின்மையால் பாதிக்கப்பட்ட மக்கள் மிகவும் மோசமான சூழ்நிலையில் வாழ்கிறார்கள். முதலாளித்துவம் அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்காவிட்டால், அவர்கள் கிளர்ச்சியில் இறங்குவார்கள்” என்றுள்ளார்.

– மதுரை மாயாண்டி