சென்னை: செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தொடங்கி தடுப்பூசி தயாரிக்க உத்தரவிட வேண்டும் தொடரப்பட்ட வழக்கில், மத்தியஅரசு பரிசீலிக்கும் என நம்பிக்கை தெரிவித்த நீதிபதிகள், தடுப்பூசி தயாரிக்க உத்தரவிட முடியாது என கூறி வழக்கை முடித்து வைத்துள்ளது.
சென்னை அருகே செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில், எச்எல்எல் பயோடெக் என்ற தடுப்பூசி உற்பத்தி மையம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிக்கப்படாமல் உள்ளது. இந்த நிறுவனத்தை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், தடுப்பூசி உற்பத்தியை உடனடியாக தொடங்க, அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்ட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினார். இது தொடர்பாக தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு மத்திய அமைச்சரையும் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த வெர்னிகோ மேரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்யும்படி உத்தரவிடக் கோரி, மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீதான விசாரணை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது.
அப்போது, செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தை திறக்க வலியுறுத்தி தமிழக முதல்வர், பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ள நிலையில், நீதிமன்றத்தை தவறாக வழிநடத்துவதைப் போல நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோர முடியாது என்றனர்.
செங்கல்பட்டு தடுப்பூசி மையம் செயல்பாடு தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்க வேண்டாமா? மாநில அரசின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க அவகாசம் வழங்க வேண்டாமா? என மனுதாரரைப் பார்த்து நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து மத்திய அரசு பரிசீலிக்கும் என நீதிமன்றம் நம்புவதாக கூறிய நீதிபதிகள், இதுசம்பந்தமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று உத்தரவிட மறுத்து வழக்கை முடித்து வைத்தனர்.