பெங்களூரு: தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரும் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வரும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் நடைபெற்ற குறுவை சாகுபடி தண்ணீர் இல்லாமல் கருகி வருகிறது. இந்த பாசனத்துக்கு தேவையான தண்ணீரை கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு திறந்துவிட மறுத்து வருகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத சித்ராமையா அரசு, ‘காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவும் மதிக்காமல் முரண்டு பிடித்து வருகிறது.
காவிரி ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழகத்துக்கு வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும். இதற்கான அவகாசம் , வரும் 12ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. ஆனால், கர்நாடக மாநில துணைமுதல்வர் டி.கே.சிவகுமார், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது என பிடிவாதம் பிடித்து வருகிறார். இதுதொடர்பாக திமுக அரசு, கூட்டணி கட்சியான காங்கிரசுடன் பேச தயக்கம் காட்டி வருகிறது.
இதையடுத்து கர்நாடக மாநில அரசை தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து, கர்நாடக அரசு பதில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவால், அதன்பின் தண்ணீர் திறந்துவிட முடியாது’ என, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.
கர்நாடக நீர்ப்பாசனத் துறை கூடுதல் தலைமைச் செயலர் ராகேஷ் சிங் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி, தமிழகத்துக்கு வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் கொடுக்க வேண்டியது வரும் 12ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைவால், அதன் பின் திறந்துவிட முடியாது. கடந்த 4ம் தேதி நிலவரப்படி, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள நான்கு அணைகளில் மொத்தம் 56.43 டி.எம்.சி., நீர் மட்டுமே உள்ளது. இதைத் தவிர்த்து, கர்நாடகாவுக்கு 140 டி.எம்.சி., தண்ணீர் தேவைப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக கர்நாடக அணையில் உள்ள தண்ணீர் குறித்து, பா.ஜ., தலைவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள கே.ஆர்.எஸ்., அணையில், பா.ஜ., தலைவர்கள் பசவராஜ் பொம்மை, கோவிந்த் கார்ஜோள், அஸ்வத் நாராயணா, பா.ஜ., – எம்.பி.,க்கள் பிரதாப் சிம்ஹா, சுமலதா ஆகியோர் திடீரென ஆய்வு செய்தனர். பின், அணையில் தண்ணீர் அளவு குறைந்துள்ளதால், தமிழகத்துக்கு நீர் திறந்து விடுவதை உடனே நிறுத்தும்படி, அதிகாரிகளிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுத்துள்ளதை அடுத்து, தமிழக டெல்டா மாவட்டங்களில், வரும் 20ல் தொடர் முழக்க போராட்டம் நடத்த, காவிரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கம் முடிவு செய்துள்ளது.