சென்னை: தமிழ்நாடு அரசு மேட்டூர் அணை உள்பட 4 அணைகளில் தூர் வார முடிவு செய்துள்ள நிலையில்,  மேட்டூர் மட்டுமல்ல எந்த அணையையும் தூர்வார முடியாது என தமிழ்நாடு  நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  தெரிவித்துள்ளார். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

90ஆண்டுகளை கடந்து 91வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள, டெல்டா மாவட்ட மக்களின் உயிர்நாடியான மேட்டூர் அணை முதன் முறையாக தூர்வாரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேட்டூர் அணை, வைகை அணை, பேச்சிப்பாறை அணை, அமராவதி அணை உள்பட 4 அணைகளில் தூர் வாருவதன் மூலம் தமிழ்நாடு அரசுக்கு ரூ.817 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான டெண்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்,  இந்த நிலையில் மேட்டூர் அணை மட்டுமல்ல எந்த அணையையும் தூர்வார முடியாது எனக் கூறியிருக்கிறார் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு டிஎஸ்பி அலுவலகத் திறப்பு விழாவில்  பங்கேற்ற அமைச்சர் துரைமுருகன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,   எடப்பாடி பழனிச்சாமியின் தடுப்பணை பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறிய  குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் கூறியவர்,  காவிரியின் குறுக்கே ஆதனூர், குமாரபாளையம், புங்கனூர் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை பணிகள் நிறுத்தப்பட்டதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கொஞ்சம்கூட ஆதாரம் இல்லாமல் பேசியிருக்கிறார். அந்த திட்டம் அதிமுகவால் தொடங்கப்பட்டதுதான். ஆனால், சரியாக ஆய்வு நடத்தாமல் தொடங்கப்பட்ட திட்டம் அது. இடத்தை தேர்வு செய்வதில்கூட தவறு செய்துள்ளனர். இதைப்பற்றி சட்டப்பேரவையில் அவர் பேசினால், உரிய பதில் அளிப்பேன் என்றார்.

இதைத்தொடர்ந்து மேட்டூர் அணையில் தூர் வார நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளதே என்ற கேளவிக்கு, மேட்டூர் அணை மட்டுமல்ல எந்த  அணைகளிலும்    தூர்வார முடியாது.  எந்த நாட்டில் தூர்வாரி இருக்கிறார்கள்?  என எதிர்கேள்வி எழுப்பியவர்,  மேட்டூர் அல்லது வேறு எந்த அணையாக இருந்தாலும், அணைக்கு கீழே மணல் வந்து ஆற்றில் சேரும். அந்த ஆற்று மணலை நாம் எடுத்து வருகிறோம். அணையை யாரும் தூர்வார மாட்டார்கள் என தெளிவுபடுத்தினார்.

முன்னதாக,  மேட்டூர் அணையில் 611.81 மில்லியன் கனமீட்டர் அளவுக்கு வண்டல் மண் சேர்ந்துள்ளதாகவும், முதல்கட்டமாக 4.005 மில்லியன் கனமீட்டர் அளவிலான வண்டலை தூர்வாரத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்குத் தேவையான சுற்றுச்சூழல் அனுமதிகளைப் பெற உதவும் வகையில் ஆலோசனைநிறுவனத்தை தேர்வு செய்வதற் கான ஒப்பந்தத்தை தமிழக நீர்வளத் துறை கோரியுள்ளதாகவும் தகவல்கள்  வெளியாகின. மேலும்,   மத்திய அரசின் நீர் மற்றும் மின்சார ஆலோசனை சேவை மையம், நீர்வளத் துறை இணைந்து மேட்டூர் அணையை தூர்வாருவதற்கான சாத்தியக் கூறு அறிக்கையை தயாரித்ததாகவும் கூறப்பட்டது.

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் காவிரி நீரை மறித்து சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பாக மேட்டூர் அணை கட்டப்பட்டது. தமிழகத்தின் நீர் ஆதாரங்களில் மிக முக்கியமான அணையாக மேட்டூர் அணை இருக்கிறது. இந்த  அணையில் சுமார் 30 சதவீதம் வண்டல் மண் மட்டுமே தேங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மேட்டூர் அணையை தூர்வார வேண்டும் என பல ஆண்டுகளாகவே சேலம் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் மேட்டூர் அணையின் ஒரு பகுதியில் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியானது.

முதற்கட்டமாக சுமார் 1.40 லட்சம் யூனிட் வரை வண்டல் மண் தூர்வாரப்பட இருப்பதாகவும், இதற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற ஆலோசகர்களை நியமம் செய்ய தமிழக அரசின் நீர்வளத்துறை ஏலம் கேட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அனுமதி கிடைத்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனால் கூடுதலாக 30 டி எம் சி தண்ணீர் சேமிக்க முடியும் என்பதால் அணையை தூர்வாரும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில்,  மேட்டூர் உள்ளிட்ட எந்த அணையிலும் தூர்வார இயலாது என தமிழக  நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் தெரிவித்துள்ளார்.

ரூ. 817 கோடி வருமானம்: மேட்டூர், வைகை உள்பட 4 அணைகளில் தூர் வார தமிழ்நாடுஅரசு முடிவு! விரைவில் டெண்டர்…

91வது ஆண்டு: முதன்முறையாக தூர் வாரப்படுகிறதா மேட்டூர் அணை?