டெல்லி:  நாட்டில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்த ஏன் தாமதம் என கேள்வி எழுப்பி உள்ள  உச்சநீதிமன்றம்  அவர்களுக்கு முகவரி இல்லை என கூறுவதை ஏற்க முடியாது, அவர்களை நாடுகடத்துவதற்கான நடவடிகைகளை விரைந்து மேற்கொள்ளுங்கள் என கூறியுள்ளது..

அமெரிக்காவில் சமீபத்தில் ஆட்சிக்கு வந்த அதிபர் டிரம்ப், தனது முதல் நடவடிக்கையாக, அந்நாட்டின் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தி வருகிறார். அதன்படி,   இந்தியர்கள் உள்பட பல நாட்டைச் சேர்ந்தவர்களை, அந்நாட்டு அரசு,  சரக்கு விமானத்தில் கை, கால்கள் விலங்கு அணிந்து வெளியேற்றி வருகிறது. சமீபத்தில் இந்தியர்களும் அவ்வாறு அங்கிருந்து நாடு கடத்தப்பட்டனர்.

இந்த நிலையில்,  இந்தியாவின்  அசாம் மாநிலத்தில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,  சட்டவிரோத குடியேறிகளை  வெளியேற்றுவதற்காக முகூர்த்த நேரத்திற்காக காத்திருக்கிறீர்களா என அம்மாநிலஅரசுக்கு   கேள்வி எழுப்பியுள்ளது.

அசாம் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய பதிவேடு முகாமின் அடிப்படையில், அம்மாநிலத்தில் 63 பேர் வெளிநாட்டினர் தங்கி இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் சட்ட விரோதமாக வசித்து வந்ததால், மாநில அரசு அவர்களை தடுப்பு முகாம்களில் வைத்துள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில், பிப்ரவரி 4ந்தேதி அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அவர்கள் வெளிநாட்டினர் என தெரிந்தும் ஏன் அவர்களை நாடு கடத்தி நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினர். ஒருவர் வெளிநாட்டினர் என கண்டுபிடிக்கப்பட்டதும் அவரை நாடு கடத்தி விடுங்கள் என்று அரசியல் அமைப்புச் சட்டம் கூறுவதாகவும் நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.

வெளிநாட்டினரின் முகவரி தெரியவில்லை எனக்கூறி நாடு கடத்தும் செயலை தாமதப்படுத்துவதை ஏற்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், நாடு கடத்துவதற்கு முகூர்த்த நேரம் வரும் வரை காத்திருக்கிறீர்களா என கேள்வி எழுப்பினர்.

மேலும் வெளிநாட்டவர்களை நீண்ட நாள் தடுப்புக் காவலில் வைத்திருக்க முடியாது என்றும் 63 பேரை அவர்களது தலைநகருக்கு விரைவில்  நாடு கடத்துங்கள் என்று உத்தரவிட்டனர்.