ஐதராபாத்: மத்திய அரசின் தொகுதி மறுவரையை ஏற்க முடியாது என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். முன்னதாக, இதுதொடர்பாக திமுக எம்.பிக்க்கள் மற்றும் அமைச்சர்கள் குழு முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து,  மார்ச் 22ம் தேதி சென்னையில் நடக்கும் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.

நாடாளுமன்ற தொகுதிகளை மக்கள் தொகையின் அடிப்படையில் மறு சீரமைப்பு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசின் இந்த முடிவால் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுக்குள் வைத்துள்ள தென்மாநிலங்கள் உள்பட சில மாநிலங்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.  மாநிலங்களின் தொகுதிகள் குறைய வாய்ப்பு உள்ளது.  இதற்கு தமிழ்நாடு  கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.  தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் எண்ணுகின்றன

. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக 7 மாநில பிரதநிதிகளை சந்தித்து ஆதரவு திரட்ட குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக ஆதரவு திரட்டும் வகையில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை திமுக குழு சந்தித்தது.

அமைச்சர் கே.என்.நேரு, திமுக எம்.பிக்கள் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து, மார்ச் 22ம் தேதி சென்னையில் நடக்கும் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரேவந்த் ரெட்டி, தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் பாஜக, தென்மாநிலங்களுக்கு எதிராக சதி செய்கிறது. எந்த காரணங்களுக்காகவும் தொகுதி மறுசீரமைப்பை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். தென் மாநிலங்களில் பாஜகவை வளர அனுமதிக்காததால், இத்தகைய முயற்சியை மேற்கொண்டு உள்ளது  என்று கூறியவர், இதுகுறித்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமையிடம் அனுமதி பெற்றபின் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து முடிவெடுப்பேன் என கூறினார்.