டெல்லி: மசோதாவுக்கு குடியரசு தலைவர், கவர்னர் அனுமதி வழங்குவது தொடர்பாக காலக்கெடு விதிக்க முடியாது என கூறியுள்ள உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, அதேவேளையில், மசோதாவை கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரமில்லை என்றும், அதை மீறினால் நீதிமன்றம் தலையிடும் என்றும் கூறி உள்ளது.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்கப்பட்டது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் தொடர்புடைய வழக்கில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று பரபரப்பு தீர்ப்பி வழங்கியது. அரசியல் சாசன அமர்வின் நீதிபதிகள் அனைவரும் ஒருமனதாக தீர்ப்பு வழங்குவதாக பி.ஆர்.கவாய் தெரிவித்தார்.
“அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 200, 201 ஆகியவை அரசியலமைப்பு அதிகாரிகளுக்கு (ஆளுநர்/ஜனாதிபதி) ஒருவித நெகிழ்வுத்தன்மையை (Elasticity) வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. நமது நாடு போன்ற கூட்டாட்சி மற்றும் ஜனநாயக அமைப்பில் சட்டம் இயற்றுதலில் உள்ள பல்வேறு சூழல்களைக் கருத்தில் கொண்டு இந்த நெகிழ்வுத்தன்மை அவசியம். எனவே, அவர்களுக்குக் கடுமையான காலக்கெடு விதிப்பது அரசியலமைப்புச் சட்டம் பாதுகாத்து வரும் இந்த நெகிழ்வுத்தன்மைக்கு எதிரானதாக அமையும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பில், ”மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், எந்த பதிலும் அளிக்காமல் ஆளுநர்களால் கிடப்பில் போட முடியாது. கால வரம்பின்றி மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைக்க ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை. மசோதவை நிறுத்தி வைப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.
அதேவேளை, எந்தவிதக் காரணமும் இன்றி, விளக்கமும் அளிக்காமல் நீண்ட காலம் மசோதாக்களைக் கிடப்பில் போட்டால், அதனை நீதிமன்றம் ‘வரம்பிற்குட்பட்ட ஆய்வு’ (Limited Judicial Scrutiny) செய்ய முடியும் என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
ஆளுநரின் தாமதம் மற்றும் நீதிமன்ற அதிகாரம்: சட்டப்பிரிவு 361-ன் படி ஆளுநர் மீது தனிப்பட்ட முறையில் வழக்குத் தொடர முடியாது என்றாலும், சட்டப்பிரிவு 200-ன் கீழ் அவர் நீண்ட காலமாகச் செயல்படாமல் இருந்தால் (Inaction), நீதிமன்றம் அதைத் தட்டிக்கேட்க முடியும். ஆளுநரின் நடவடிக்கைக்கான காரணங்களை நீதிமன்றம் ஆராய முடியாது என்றாலும், நீண்ட காலதாமதத்தை எதிர்த்து மாநில அரசுகள் நீதிமன்றத்தை அணுகலாம் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு குறிப்பட்டதை போல் ஆளுநருக்கு 4-வது தெரிவு கிடையாது, 3 தெரிவுகள் மட்டுமே இருக்கின்றன.
அதாவது, மாநில அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குதல்,
நிராகரித்தல் மற்றும் விளக்கத்துடன் சட்டப்பேரவைக்கு அனுப்புதல் அல்லது
அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்புதல் ஆகிய மூன்று விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்குதான் ஆளுநருக்கு விருப்புரிமை உள்ளது.
ஒரு மாநிலத்துக்கு இரண்டு அதிகார அமைப்புகள் இருப்பதை எங்களால் ஏற்க முடியாது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், அமைச்சரவையும்தான் மாநிலத்தில் இயக்கும் முதன்மையான அதிகார அமைப்பாக இருக்க முடியும்.
ஆளுநர்கள் மாநில அரசுக்கு இடையூறு விளைவிக்கும் நடைமுறைகளை மேற்கொள்ளக் கூடாது.
ஒரு மசோதா சட்டமாக மாறும்போது மட்டுமே நீதித்துறை மறு ஆய்வு செய்ய முடியும்.
நம்மைப்போன்ற ஜனநாயக நாட்டில், ஆளுநர்களுக்கான காலக்கெடுவை நிர்ணயிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது. உச்ச நீதிமன்றத்திற்கு மகத்தான அதிகாரத்தை வழங்கும் பிரிவு 142-ஐ மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க பயன்படுத்த முடியாது.
மசோதா நீண்ட நாட்கள் கிடப்பில் இருந்தால், அதற்கு ‘தானாகவே ஒப்புதல் கிடைத்ததாகக் கருத முடியாது’ என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. தானாக ஒப்புதல்’ (Deemed Assent) கிடையாது: நீண்ட காலம் மசோதா கிடப்பில் இருந்தால், அதற்குத் ‘தானாகவே ஒப்புதல் கிடைத்ததாகக் கருத வேண்டும்’ (Deemed Assent) என்ற வாதத்தை உச்ச நீதிமன்றம் முற்றிலுமாக நிராகரித்தது. “நீதிமன்றம் ஒரு அரசியலமைப்பு அதிகாரிக்கு (ஆளுநர்) மாற்றாகச் செயல்பட முடியாது. அவ்வாறு செய்வது அரசியலமைப்புச் சட்டத்தின் ஆன்மாவிற்கு மட்டுமல்ல, ‘அதிகாரப் பகிர்வு’ (Separation of Powers) என்ற அடிப்படை கட்டமைப்பிற்கும் எதிரானது,” என்று நீதிபதிகள் கூறினர்.
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சார்பாக உச்ச நீதிமன்றத்திற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நன்றி தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்துவது தொடர்பான வழக்கில், நீதிபதி ஜே.பி. பர்திவாலா தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு ஒரு தீர்ப்பை வழங்கியது. அதில், “ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் மசோதாவை நிறுத்தி வைத்தால், அது நிராகரிக்கப்பட்டதாகவே கருதப்படும். ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்,” என்று காலக்கெடு விதித்திருந்தது.
அதாவது, தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. அதில், ஆளுநர் காலம் தாழ்த்தியது சட்டவிரோதமானது என்றும், அவர் தாமதப்படுத்திய மசோதாக்கள் முன்தேதியிட்டு நிறைவேறியதாகக் கருதப்படும் என்றும் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதிபதிகள் அமர்வு தீர்ப்பில் குறிப்பிட்டது.
மேலும், அந்தத் தீர்ப்பில் மசோதாக்கள் மீது ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஒட்டுமொத்தமாக மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் எனவும் காலக்கெடு விதித்தது. இந்தத் தீர்ப்பில் தெளிவுரை கோரும் வகையில் 14 கேள்விகளை எழுப்பி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு குடியரசுத் தலைவர் திரெüபதி முர்மு கடிதம் அனுப்பினார்.
அதை வழக்காக விசாரணைக்கு அனுமதித்த தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, கடந்த ஆகஸ்ட் 19 தொடங்கி செப்டம்பர் 11-ஆம் தேதிவரை 10 நாள்களுக்கு விசாரணை நடத்தியது. அரசியல் சாசன அமர்வுக்கு தலைமை வகிக்கும் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் பதவிக் காலம் வரும் 23-ஆம் தேதி நிறைவடைகிறது. அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நவம்பர் 21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அவரது பணியின் கடைசி நாளாகும். அதற்கு ஒரு தினம் முன்பாக முக்கியத்துவம் வாய்ந்த மசோதா காலக்கெடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குடியரசு தலைவரின் 14 கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் பதில் – தீர்ப்பின் முழு விவரம்