ராணுவ நடவடிக்கையில் சக வீரர்களால் கொல்லப்பட்ட ஒருவரின் குடும்பத்தினர் எதிரி நடவடிக்கையில் கொல்லப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் பெற உரிமை உண்டு என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
‘குடும்ப ஓய்வூதியம்’ தொடர்பாக 2022 பிப்ரவரி 22ம் தேதி ஆயுதப்படை தீர்ப்பாயம் (AFT) பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ருக்மணி தேவி என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் அனுபிந்தர் சிங் கிரேவால் மற்றும் தீபக் மன்சந்தா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
ருக்மிணி தேவியின் மகன் இந்திய ராணுவத்தில் ஒரு சிப்பாயாக இருந்தார். ஜம்மு காஷ்மீரில் ‘ஆபரேஷன் ரக்ஷக்’ நடவடிக்கையின் போது அவர் பணியில் இருந்தார். 1991 ஆம் ஆண்டு, சக வீரர்களால் சுடப்பட்ட ஒரு தோட்டா அவரைக் கொன்றது.
அந்த ராணுவ வீரர் 1991-ல் இறந்தாலும், ஓய்வூதியத்திற்கான விண்ணப்பம் 2018-ல் சமர்ப்பிக்கப்பட்டது.
ருக்மணி தேவியின் மனுவை எதிர்த்த மத்திய அரசு தாமதமாக விண்ணப்பித்தல் உட்பட பல்வேறு காரணங்களுக்காக ஓய்வூதிய விண்ணப்பத்தை தள்ளுபடி செய்யக் கோரி மனு செய்தது.
விண்ணப்பத்தை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக மத்திய அரசு கூறிய வாதத்தை நிராகரித்த உயர் நீதிமன்றம், நாட்டிற்காக சேவை செய்த ஒரு ராணுவ வீரர் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
குடும்ப ஓய்வூதியம் கோரிய ருக்மிணி தேவிக்கு வழக்கமான ஓய்வூதியத்தை விட அதிகமாக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சகத்திற்கு AFT கேள்வி எழுப்பியது.
இதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் ருக்மிணி தேவியின் வழக்கு வேறு. இதை வேறு விதமாகக் கருத வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், “எந்தவொரு நடவடிக்கையின் போதும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் ஒரு சிப்பாய் அல்லது சக ஊழியர் இறந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு அரசாங்கத்திடமிருந்து அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய எந்த சலுகைகளும் இழக்கப்படக்கூடாது” என்று தீர்ப்பளித்துள்ளனர்.