சென்னை:

யிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வந்த தூத்துக்குடி ஸ்டெர்லை ஆலையை திறக்க உத்தர விட முடியாது என்று சென்னை உயர்நீதி மன்றம் மீண்டும் கூறி உள்ளது.

பராமரிப்பு பணிக்காக ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் தரப்பில் மீண்டும் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு, மூச்சுத் திணறல் உள்பட பல்வேறு நோய்களை உருவாக்கி வந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை காரணமாக ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில், அந்த பகுதி நிலத்தடி நீரும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, ஆலைக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்த நிலையில், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம், உச்சநீதி மன்றம் வரை சென்று வந்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தை நாட வேதாந்தா நிறுவனத்துக்கு  உச்சநீதி மன்றம் அறிவுறுத்தியது

தமிழக அரசால் கடந்த ஆண்டு (2018) மே மாதம் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி, வேதாந்தா நிறுவனம் உயர்நீதி மன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வழக்கு தொடர்ந்தது. விசாரணையை தொடர்ந்து ஆலையை திறக்க உத்தரவிட முடியாது என்று நீதிமன்றம் கடந்தா மார்ச் 1ந்தேதி உத்தரவிட்டது.

இந்த நிலையில், வேதாந்தா சார்பில் மீண்டும் ஆலை பராமரிப்பு பணிக்காக திறக்க அனுமதிக்கு மாறு கோரிக்கை விடுத்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வேதாந்தா நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமாசுந்தரம், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதல், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள் பழுதாகி வீணாவதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே, ஆலை பராமரிப்பு பணிக்காக ஆலையை இயக்க இடைக்கால உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.

அப்போது, தமிழக அரசின்   மாசு கட்டுப்பாடு வாரியம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன், பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து,  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆஜராகி, தங்கள் தரப்பையும் மனுதாரராக ஏற்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் . இந்த வழக்கில் உத்தரவிடும் முன் தங்கள் தரப்பு வாதங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், பராமரிப்புக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தனர். ஒரு நிறுவனத்திற்காக அவசரமாக வழக்கை விசாரிக்க முடியாது என்றும் மறுத்து விட்டனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகு அப்பகுதியில் தற்போதுள்ள சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீரின் தரம் குறித்து ஆய்வு செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அறிவுறுத்தினர். வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 23 ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் இடைக்கால கோரிக்கை குறித்து வாதங்களை முன்வைக்கலாம் என்று உத்தரவிட்டனர்.

அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 23ந்தேதி விசாரணையின்போத, தங்களது தரப்பு வாதங்களை முன்வைப்போம் என்று கூறினார்.