சென்னை:
1000 படுக்கைகளுடன் காஞ்சிபுரத்தில் ரூ.118 கோடியில் புற்றுநோய் சிகிச்சை கட்டிடம் கட்டுவதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து தஞ்சாவூர் மருத்துவமனையில் ரூ.24 கோடி கட்டிடங்கள் திறந்து வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், 24 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையம், அரசு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள செவிலியர் பயிற்சிப் பள்ளிக் கட்டடம் மற்றும் தீக்காய சிகிச்சைப் பிரிவுக் கட்டடம், சேலம் – அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள தீக்காய சிகிச்சைப் பிரிவுக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
மேலும், 134 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், காரப்பேட்டை அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் கட்டப்படவுள்ள ஒப்புயர்வு மையக் கட்டடம் மற்றும் தஞ்சாவூர் – அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் கட்டப்படவுள்ள புதிய கண் சிகிச்சை பிரிவுக் கட்டடங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
ஏழை எளிய மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், வட்ட மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல், நவீன மருத்துவக்கருவிகளை நிறுவுதல், புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களை தோற்றுவித்தல், எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, அவர்கள் வாழும் பகுதிகளிலேயே தரம் வாய்ந்த மருத்துவ வசதி கிடைக்க வழிவகை செய்தல், மருத்துவத்துறையில் தொழில்நுட்ப வளர்ச்சியினை பயன்படுத்தி உயர்தர மருத்துவ வசதிகளை அளித்தல் போன்ற பல முன்னோடி திட்டங்களை புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர், அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையம்;
அரசு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் 7 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள செவிலியர் பயிற்சிப் பள்ளிக் கட்டடம் மற்றும் அரசு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 கோடியே 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தீக்காய சிகிச்சைப் பிரிவுக் கட்டடம்;
சேலம் – அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 கோடியே 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தீக்காய சிகிச்சைப் பிரிவுக் கட்டடம் என மொத்தம் 24 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் 17.7.2019 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-–ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், காஞ்சிபுரம் மாவட்டம், அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் புற்றுநோய்க்கான ஒப்புயர்வு மையம் ஒன்று ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், காரப்பேட்டை, அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் 118 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 1,000 படுக்கைகளுடன் கூடிய ஒப்புயர்வு மையக் கட்டடம் மற்றும் தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் 16 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய கண் சிகிச்சை பிரிவுக் கட்டடம் ஆகிய கட்டடங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, தலைமைச் செயலாளர் க.சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், மருத்துவக் கல்வி இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் ஆர். நாராயணபாபு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.